Saturday 20 January 2024

நாட்டின் வளம் நமக்குந்தான்!

 

இந்த நாட்டின் வளம் நமக்கும் சேர்த்துத்தான்.  அந்த வளத்தை யாரும் ஒளித்து  வைக்கவில்லை.  அது மலாய்க்காரர், சீனர், இந்தியர் என்று யாரும் பிரித்து வைக்கவில்லை. 

நாட்டின் வளம் எல்லாருக்கும் பொதுவானது. தேவை எல்லாம்  கொஞ்சம் முயற்சி அவ்வளவு தான்.  மற்றவர்களிடம் அந்த முயற்சி  உண்டு நம்மிடம் இல்லை. அது தான் பிரச்சனை.

நாம் எல்லாகாலங்களிலும்  யாரோ ஒருவரிடம் கைகட்டி வேலைசெய்யவே விரும்புகிறோம். சொந்தமாக ஓர் ஆணியைக் கூட புடுங்க விரும்புவதில்லை. அப்புறம் எங்கே ஆணியை அடிப்பது பிடுங்குவது  நடக்கும்?  அதனைச் செய்தால் அது சொந்தத் தொழிலாக மாறிவிடும். நாம் செய்வதில்லை!

சீனன் பணக்காரன் என்பது நமக்குத் தெரியும். அதெப்படி அவர்களால் முடிந்தது?  நமக்கு ஆணி அடிக்கத் தெரியும் என்பது சீனனுக்குத் தெரியும்.  அவன் நம்மைப் பயன்படித்துக் கொள்கிறான்!  நாம் அவனிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு ஆணி அடித்துக் கொண்டே இருக்கிறோம்!  இதற்கு ஒரு முடிவே இல்லையா?  முடிவு உண்டு.  முதலில் நமக்கு ஆணி அடிக்கத் தெரியும் என்பதை நாம் நம்ப வேண்டும்.  அதன் பின்னர் தான் தொழில்  செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் நமக்கு வரும்.

ஒன்றை மறந்து விடாதீர்கள்.  நாட்டில் எல்லா வளங்களும் உண்டு. அது ஏதோ ஓர் இனத்துக்கு மட்டும் அல்ல. அனைத்து இனங்களுக்கும் தான்.

வெளிநாடுகளிலிருந்து வந்த வங்காளதேசிகள், பாக்கிஸ்தானியர்கள், மியான்மார் ரோகிங்யாக்கள் - இப்படி பலரும் இங்கு வந்து தொழில் செய்கிறார்கள். நாமும் அவர்களிடம் பொருட்களை வாங்குகிறோம்.  அதனையே நம்மால் செய்ய முடியாதா?  கொஞ்சம் யோசியுங்கள்.

எல்லாத் தொழில்களையும் நம்மாலும் செய்ய முடியும்.  காரணம் நம்முடைய பின்னணியே வியாபாரத்தைச் சார்ந்தது தான்.  சரி அப்படியில்லை என்று நீங்கள் நினைத்தால் மற்றவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.  

நாட்டின் வளம் யாருக்கோ அல்ல. நமக்குந்தான்.  நாம் தான் நகராமல் இருக்கிறோமே தவிர அதற்கு யாரோ காரணம் அல்ல.  இனி மேலும் யார் யாரையோ குற்றம்  சொல்லுவதை விட்டு  'குறை நம்மிடமே' என்பதை ஒப்புக் கொண்டு வளத்தை நோக்கி நகர்வோம்!

நமது வளர்ச்சியே நமது வெற்றி!

No comments:

Post a Comment