Wednesday 24 January 2024

யார் வந்தால் என்ன?

பொதுவாக தைப்பூசம் என்றாலே யார் வருவார் யார் வரமாட்டார் என்கிற விவாதம் நம்மிடையே எழத்தான் செய்கிறது. எழத்தான் செய்யும்.

காலங்காலமாக வருபவர்கள் இப்போது ஏன் வருவதில்லை  என்று கேட்கப்படுகின்ற கேள்வி நியாயமானது தான்.  ஆனால் அதனை எல்லாம் யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை.  அவசியமுமில்லை.

எல்லாவற்றுக்குமே ஓர் அரசியல் உண்டு.  அரசியல் எல்லாரையுமே பிரித்து வைக்கக் கூடிய சக்தி வாய்ந்தது.  இப்போது நாம் வாழுகின்ற காலகட்டம் என்பது எந்தப் பிரச்சனையானாலும் அதனை அரசியலாக்குவது, அதற்கு  மதசாயம்  பூசுவது  போன்ற காலகட்டத்தில்  நாம் வசிக்கிறோம்.

வாக்குவங்கி பலமற்று இருந்தால் அதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒன்று வாக்குவங்கி பலமாக இருக்க வேண்டும் அல்லது பொருளாதாரம் பலமாக இருக்க வேண்டும்.  நமக்கு இரண்டுமே பலமற்றுக் கிடப்பதால்  நம்மைப் பெரிதாக யாரும் பொருட்படுத்துவதில்லை. 

ஒரு சிலர் முன்னாள் பிரதமர் நஜிப் பத்துமலைக்கு வேஷ்டி -  ஜிப்பாவுடன்,  வந்தாரே அதே போல ஏன் மற்றவர்கள் வருவதில்லை? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.   தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் இப்படியெல்லாம்  நடிகர்களாக மாறுவது என்பது சாதாரண விஷயம் தான்!   இன்றைய அவர் நிலை என்ன  என்பதையும் மறந்துவிட வேண்டாம்.  நிச்சயமாக அரசியல்வாதிகள்  யாரும் இனி இப்படி நடிக்கத் தயங்குவார்கள் என நம்பலாம்!    காரணம் நடித்தால் தண்டிக்கப்படுவாய் என்பது தான் நீதி. அது எந்தத் தெய்வமாக இருந்தால் என்ன? நீ தண்டிக்கப்படுவாய்!

தைப்பூசத் திருவிழா என்பது இந்துக்களுடைய  பெருவிழா. அது அப்படியே இருக்கட்டும். யார் வேண்டுமானாலும் வரட்டும். வேண்டுதல் செய்யட்டும். ஆனால் வராதவர்கள் பற்றி கவலைப்படத் தேவை இல்லை. அதுவும் குறிப்பாக அரசியல்வாதிகள்.  அவர்கள் வராததற்குப் பல காரணங்கள் உண்டு. அதனுள் நாம் போக வேண்டாம். அது அவர்கள் பிரச்சனை.

கலந்து கொள்பவர்களைக் கௌரவியுங்கள். இந்த விழாவில்  அமைச்சர் கோபிந் சிங் கலந்து கொண்டார் நல்ல செய்தி.  அவரை ஒதுக்குவதற்கு  எந்த நியாயமுமில்லை.  இந்தியர்களுக்கு  தான் எதனையும் செய்யப்போவதில்லை என்று  என்றுமே அவர்  சொன்னதில்லை. அப்படி அவர் சொல்லவும் மாட்டார்.

அதனால் யார் வருகிறார்கள், வரவில்லை என்பது கோவில் நிர்வாகத்தின் பிரச்சனை அல்ல.  வந்ததை  வரவில் வைப்போம்!    அவ்வளவுதான்!

No comments:

Post a Comment