Friday 26 January 2024

"பாஸ்" கட்சியினரின் மனமாற்றம்!

 நமது நாட்டின் எதிர்கட்சியான "பாஸ்" கட்சியைப்பற்றி பேசும் போது அவர்களைப்பற்றி நம்மிடம் எந்த நல்லெண்ணமும் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அவர்கள் கொள்கை என்பது சமயத்தை அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் என்பதைத் தவிர அவர்களைப்பற்றி பேச வேறு ஒன்றுமில்லை. மற்ற சமயத்தினரைக் கிண்டல் அடிப்பது,  மற்ற இனத்தவரை மட்டம்தட்டிப் பேசுவது - இது தான்  அவர்களின் தலையாயக் கொள்கை.  தங்கள் பலவீனங்களைக் கூட பலம் என்று பேசும் ஓர் அறிவீனமானக் கூட்டம் என்பது தான் அவர்களைப் பற்றியான நமது கணிப்பு. 

அவர்களைப்பற்றியான நமது கணிப்பு இப்படி இருக்கையில் சமீபத்தில் திடீரென  பல்டி அடித்ததை நாம் பார்க்கிறோம்!  உள்நோக்கம்  என்பது இருக்கத்தான் செய்யும். நம் பெரியவர்கள் சொல்லுவார்களே: சொழியன் குடுமி சும்மா ஆடாது என்று.  அது ஏன் ஆடுகிறது என்பது போக போகத்தான் தெரியும்.

கிளந்தான், திரெங்காணு, பெர்லீஸ், கெடா என்று  மலேசியாவின் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர  வேறு எல்லைகளைக்  தொடக்கூட   முடியவில்லையே என்கிற கவலை அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். எல்லா அரசியல்வாதிகளுக்கும் நாட்டையே ஆள வேண்டும்  என்கிற ஆசை இல்லாமலா போகும்?  

அதனால் தான் எப்போதும் மலாய், இஸ்லாம் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென தங்கள் கவனத்தை இந்தியர்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள்!  அவர்களின் "தைப்பூசம்  வாழ்த்து!"   என்பது  இந்துக்களை நோக்கி  "நாங்களும் உங்களுடன் கைகோர்க்க விரும்புகிறோம்!" என்று  கூறுவதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆமாம் முற்றிலுமாக இஸ்லாமியர்களையே சார்ந்திருக்கும் ஒரு கட்சி  இப்போது மற்ற இனத்தவர்களின் மீதும்  தனது செல்வாக்கைப் பயன்படுத்த விரும்புகிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.  இது மனமாற்றமா அல்லது இந்தியர்களை  ஏமாற்றும் தந்திரமா?  எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.  ஆனால் எங்கள் பாதம் பணிய வைத்துவிட்டோமே!  அது போததா?

இந்த மாற்றத்தை நாமும் வரவேற்கிறோம்! 

No comments:

Post a Comment