Thursday 18 January 2024

குடிதான் நமது வீழ்ச்சி!


 எல்லா காலங்களிலும், அப்போதும் சரி இப்போதும்  சரி நமது அடையாளம் என்றால் அது நிரந்தர குடிகாரன் அடையாளம் தான்!  

அதனை மறக்கவோ மறுக்கவோ  முடியாத ஓர் அடையாளம்!

நம் நாட்டில் ஒவ்வொரு  இனத்திற்கும் ஓர் அடையாளம் உண்டு.  சோம்பேறி,  பேராசை, குடி - முறையே மலாயக்காரர், சீனர், இந்தியர் இப்படித்தான் பொதுவாக  அடையாளம் கூறப்படுகின்றது.

ஆனாலும் இதில் எந்த உண்மையும் இல்லை. ஒவ்வொரு இனத்திலும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்வர்.  அதற்காக  அனைவரையும் இப்படித்தான் என்று  முத்திரைக் குத்துவது  பொருத்தமற்றது.  ஆனாலும் அது என்னவோ அப்படித்தான் தொடர்கிறது.

எத்தனையோ பேர் சொல்லி விட்டார்கள். எழுதிவிட்டார்கள்.  கேட்பதாகத் தெரியவில்லை.  எனக்குத் தெரிந்த ஓர் இளைஞனிடம் சொன்னதை மீண்டும் சொல்லுகிறேன். அவன் திருந்திவிட்டான். ஏன் உங்களால் முடியாது?   உன் குடும்பத்திற்குத் தேவையான தேவைகளை, செலவுக்கான தொகையை உன் மனைவியிடம் கொடுத்துவிடு. பள்ளி செல்லும் உன் மகளுக்கான செலவையும் கொடுத்துவிடு. அந்தக் குழந்தைக்கு மாதம் ஐம்பது வெள்ளி வங்கியில் சேர்த்து வை.  குடும்பத்தின் தேவை அவ்வளவு தான்.  மீதப் பணம் மட்டும் தான் உனது பணம். அது உன் சொந்த செலவுக்கு.

நான் சொன்னது  அவ்வளவு தான். அவன் அதனைக் கடைப்பிடித்தான். அதன் பின்னர் அவன் குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏதுமில்லை. அது போதுமே,   குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லை என்றால் அவன் குடிகாரன் என்பது கூட வெளியே தெரிய நியாயமில்லை.

குடிக்கவே கூடாது என்று யாரும் சொல்ல வரவில்லை. அந்தக் குடியை உன்னோடு வைத்துக்கொள். உன் குடும்பத்திற்குள் கொண்டு வராதே. குடும்பத்தைச் சீரழிக்காதே என்பதைத்தான் நாம் சொல்ல வருகிறோம்.

நமது இன வீழ்ச்சிக்கு யார் யாரையோ குறை சொல்லுகிறோம். அரசாங்கம் சரியில்லை. நமது தலைவர்கள் சரியில்லை  என்று நம்மிடையே நீண்ட பட்டியைலைக் கொண்ட குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறோம்.  ஆனால் முதல் குற்றவாளி என்றால் அது யார். குடும்பத் தலைவர்களைத் தவிர வேறு யாருமல்ல. குடும்பத் தலைவர்  சரியாக இருந்தால்  எல்லாம் சரியாக இருக்கும். அந்தக் குடும்பமே நல்ல நிலையில் இருக்கும்.

இன்று நம்மைப்பற்றி வெளிப்படையாக  பேசப்படும் இந்த 'மாபோக்'   கலாச்சாரத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்கும் வரை அந்த அடையாளம் நம்மைத்  தொடரத்தான் செய்யும்.

குறைந்தபட்சம் நீங்களாவது இன்றோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? உங்கள் வீழ்ச்சியைத் தடுப்பீர்களா?

No comments:

Post a Comment