Monday 15 November 2021

விசாரணை வேண்டும்!

மாமன்னர் தனது பிறந்த நாளில் நல்லதொரு அறிவிப்பை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

"கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட பிரசண்டன்!" என்று ஒரு பழமொழி உண்டு.

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் எப்போது கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தாரோ அன்றிலிருந்து நம் நாட்டிற்கு வந்தது பேராபத்து! எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன!

முகைதீன் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல மேடை நாடகங்கள், பல அரிதாரங்களை போட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்!

"அவனுக்குப் பதவி, இவனுக்குப் பதவி, அவனை மந்திரியா போடு, இவனை வெளி நாட்டுத் தூதரா போடு,  எல்லாருக்கும் பதவி, எல்லாரும்  சமமாக கூடி வாழலாம் வாங்க!  எல்லாருக்கும் அமைச்சருக்கான சம்பளம்!ஆனால் அரசாங்கத்தை மட்டும் கவிழ்த்திராதீங்க!  நீங்க கேட்கறத எல்லாம் செய்யிறேன்! நான் பிரதமரா இருக்கனும்! அத மட்டும் யாரும் கேட்டுறாதீங்க!"  என்று அள்ளிவிட்டே - பணத்தை அள்ளிவிட்டே - அரசாங்கத்தை நடத்தி வந்தவர் அவர்!

நிச்சயமாக நாம் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறையவே உண்டு!  நாம்  கேள்வி கேட்டால் நம்மை ஆள்பவர்களுக்கு எதிரிகள் என்று முத்திரைக் குத்துவார்கள்!

ஆனால் மாமன்னர் அதனைக் கூறியிருக்கிறார்.  பணம் 62 கோடி வீண் விரயம்  செய்யப்பட்டிருக்கிறது, வீணடிக்கப்பட்டிருக்கிறது அதற்கு விசாரணை வேண்டும் என்று மாமன்னர் உத்தரவிட்டிருக்கிறார். 

தேவையான நேரத்தில் மாமன்னரின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நாம் நிச்சயமாக மாமன்னரின் அறிவிப்பை வரவேற்கிறோம்.  காரணம் இப்போது இருக்கும் அரசாங்கமும் ஏறக்குறைய முகைதீனின் அரசாங்கத்தோடு ஒத்துப்போகும்  நிலையில் தான் இருக்கிறது. யாருக்காவது ஏதாவது பதவியைக் கொடுத்துத் தான் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம்!

இவர்களுக்கும் அந்த அறிவிப்பு ஒரு எச்சரிக்கையைத் தரும் என நம்பலாம். இப்போது நாட்டிற்கு ஒரு சவாலான நேரம். தொற்று நோயால் ஏற்பட்ட ஒரு நெருக்கடி நிலை. மக்கள் வேலை இல்லாமல் பலர் பட்டினி கிடக்கும் நேரம். வேலை இருந்தால் அவர் அவர் பிழைப்பை அவரவர் கவனித்துக் கொள்வார்கள். வேலைக்கும் வழி இல்லை. குடும்பத்தைக் காப்பாற்றவும் வழியில்லை. வறுமை என்றால் என்ன என்பதை இப்போது தான் மக்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஆனால் கொழுத்துப் போன அரசியல்வாதிகளோ நாட்டைக்  கவனிக்காமல் தங்களது பதவிக்காக காசை கரியாக்குகிறார்கள். பணம் கோடிக்கணக்கில் வீணடிப்பு, இவர்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள! மக்களின் நலனுக்காக அல்ல!

ஆனால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  மாமன்னரின்  உத்தரவு எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் பலனளிக்க வேண்டும் என்பது தான் மக்களின் ஆசை.

மாமன்னரோடு சேர்ந்து நாமும் "விசாரணை வேண்டும்!" என்று உரத்த குரலில் கூறுவோம்!

விசாரணை வேண்டும்! விசாரணை வேண்டும்!

No comments:

Post a Comment