Saturday 20 November 2021

யார் பக்கம்?

 

இன்றமலாக்கா மாநிலத்தில் நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் யார் பக்கம் இருக்கப் போகின்றனர்?

சென்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் கட்சியினர்  ஆட்சி அமைத்தனர். மொத்தம் 28 தொகுதிகள். குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். ஆனால் மிகக் குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்றால் அது மிகவும் பலவீனமாக அமையும்.

சென்ற தேர்தலில் அது தான் நடந்தது. ஒரிரு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் எதிர்தரப்பு அவர்களை "வாங்க" முயற்சி செய்யும்! நமது நாட்டில் இது போன்ற "வாங்குகின்ற" விஷயத்தைக் கேள்விப்பட்டதில்லை. இப்போது கேள்விப்படுகிறோம். இனி மேலும் கேள்விப்படுவோம்!  யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள்  வாங்க முயற்சி செய்வார்கள்!  பதவியில் இருந்து அனுபவித்தவர்கள் அவ்வளவு எளிதில் பதவியை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்!

இப்போது மலாக்காவில் மூன்று கட்சிகளே பிரதான கட்சிகளாக போட்டியிட்டாலும் இரண்டு கட்சிகள் தான் முக்கியமாகப் பேசப்படுகின்ற கட்சிகள். ஒன்று பாரிசான் நேஷனல். இன்னொன்று  பக்காத்தான் ஹரப்பான்.

இதில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது முழுமையான வெற்றியாக இருக்க வேண்டும் என்பதே நமது ஆசை. நமக்குத் தொங்கு சட்டமன்றம் வேண்டாம். மிக எளிதாக உறுப்பினர்களை வாங்கும் சட்டமன்றம் வேண்டாம். வெற்றி என்பது எந்த வகையிலும் கவிழ்க்க முடியாத சட்டமன்றமாக இருக்க வேண்டும். அப்போது தான் ஓர் நிலையான அரசாங்கத்தை நம்மால் பார்க்க முடியும்.

இந்த முறை வெற்றி எந்த திசை நோக்கிப் போகும்? பக்காத்தான் ஹரப்பானுக்கான வாய்ப்பு அதிகம் என்றே நான் கணிக்கிறேன். நேரடி கள ஆய்வுகள் எதுவுமில்லை! சும்மா ஒரு கணிப்பு தான். சென்ற முறை பக்காத்தானைத் தான் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களைக் கவிழ்த்தவர்கள் பாரிசான் கட்சியினர்.  மக்களுக்கு இது புரியாத புதிர் அல்ல. மக்களுக்கு அரசியலில் என்ன நடக்கிறது என்பது தெரியும்.

அதுவும் இந்தியர்களைப் பொறுத்தவரை பாரிசானில் இருக்கும் ம.இ.கா. சட்டமன்ற உறுப்பினர்களால் எதுவும் ஆகப்போவதில்லை! அது ஊரறிந்த உண்மை!  அதிசயம் ஒன்றுமில்லை. ம.இ.கா.வினரைத் தேர்ந்தெடுப்பது என்பது கொள்ளையர்களைத் தெர்ந்தெடுப்பதற்குச் சமம். அது மட்டும் அல்ல. அவர்கள் வாயைத் திறக்க வேண்டிய இடத்தில் வாயில் பணத்தைப் போட்டு அடக்கிக் கொள்வார்கள்!

பொறுத்திருப்போம். இன்னும் சில மணி நேரங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். மக்கள் யார் பக்கம் என்று!

No comments:

Post a Comment