Tuesday 16 November 2021

"வெஜி" முதலையைத் தெரியுமா?



 முதலை என்றால் நம் ஞாபகத்திற்கு வருவது என்ன? நமக்குத் தெரிந்ததுஎல்லாம் காலங்காலமாக "முதலைக் கண்ணீர்" என்கிற வார்த்தையைப்பயன்படுத்துகிறோம். முதலையையே நாம் பார்க்காத போது அதன் கண்ணீரை எங்கே பார்த்திருக்கிறோம்?

அத்தோடு முதலையின்  வாயில் அகப்பட்டால் நமக்கு ஒரு இறுதி முடிவு கிடைத்துவிடும். இறுதி சடங்கு கூட செய்ய முடியாது! அப்படியென்றால் முதலை சுத்த அசைவம். எப்போதும் சுத்த அசைவம். தப்பித்தவறி இப்படியும் ஒரு முதலை உண்டு என்பதை நாம் படித்த போது அதிர்ந்து போனோம்.

 கேரளாவில் கோவில் ஒன்றில் சுத்த சைவமான முதலை ஒன்று கோவில் குளத்தில்  சுற்றிவருகிறது! கோவிலை பாதுகாக்க சுற்றிவருகிறது. பக்தர்கள் கொடுக்கும் பிரசாதத்தைச் சாப்பிடுகிறது. குளத்தில் பக்தர்கள் இறங்கி குளிக்கிறார்கள்.  எந்த ஆபத்தும் இல்லை! ஏன் அந்த குளத்தில் உள்ள மீன்களைக் கூட சாப்பிடுவதில்லை! அந்த அளவுக்கு நூறு விழுக்காடு சைவம்!

இது நடப்பது கேரளா, காசர்கோடு மாவட்டம், அனந்தபுரா என்னும் கிராமத்தில். அந்த கிராமத்தில் உள்ள ஏரிக் கோவிலில் தான் இந்த அதிசயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! அந்த கோவில் குளத்தில் எப்படி அந்த முதலை வந்தது என்கிற விபரம் யாருக்கும் தெரியவில்லை. சிறு குட்டியாக வந்தது. கடந்த 70 வருடங்களுக்கு  மேலாக  அந்த குளத்திலும் கோவில் வளாகத்தில் உள்ள குகை ஒன்றிலும் அது வாழ்ந்து கொண்டிருக்கிறது! கோவிலை சுற்றி வந்து பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது! அதனுடைய சாப்பாடு என்பது கோவில்/பகதர்கள்  கொடுக்கும் பிரசாதம் மட்டும் தான். அந்த முதலைக்கு ஏதோ தெய்வீகத் தன்மை உள்ளதாக நம்பப்படுகிறது.

அந்த முதலையை பாபியா என்று செல்லமாக அழைக்கிறார்கள். அப்படி ஒரு பெயரை யார் வைத்தார்கள் என்கிற தகவலும் இல்லை.

உலகில் எத்தனையோ அதிசயங்களைப் பார்க்கிறோம். இது போன்ற அதிசயங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இது போன்ற அதிசயங்கள் பல நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
                                              Bazoule, Burkina Faso, West Africa


ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டில்,  ஒரு கிராமத்தில், இப்படி ஓர் அதிசயம் நடக்கிறது.  மேலே உள்ள அந்த குளத்தில் நூற்றுக்கணக்கான முதலைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த முதலைகளுக்கும் அங்குள்ள மனிதர்களுக்கும் ஏதோ ஒரு தெய்வீக உறவு இருப்பதாக நம்புகிறார்கள். சிறுவர்கள் அந்த முதலைகளோடு நீச்சல் அடிக்கிறார்கள், விளையாடுகிறார்கள் - அவர்களுக்கு அந்த முதலைகளினால் எந்த ஆபத்தும் ஏற்பட்டதில்லை! இறந்து போன அவர்களின்  முன்னோர்கள் தான் அங்கு முதலைகளாக வாழ்கிறார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். முதலைகள் இறந்தால் மனிதர்களை அடக்கம் செய்வது போலவே அந்த முதலைகளுக்கும் சகல மரியாதைகளோடு அடக்கம் செய்கிறார்கள்!

ஆனால் இந்த முதலைகள் சைவம் அல்ல! அசைவ முதலைகள்!
                                

No comments:

Post a Comment