Friday 5 November 2021

ஜேய்பீம்

ஜெய் (வெற்றி) பீம் - ராவ் ராம்ராஜ் அம்பேத்கார் - ஜெய்பீம்

பொதுவாக நான் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. ஓர் அரைமணி நேரத்திலேயே தூக்கம்  வந்துவிடும். 

ஒரு சில படங்களை விரும்பிப் பார்ப்பதுண்டு. குறிப்பாக இயக்குனர் பா.ரஞ்சித். சமுத்தரக்கனி போன்றவர்களின் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன். ரஞ்சித் இயக்கிய சார்போட்டா பரம்பரை படத்திற்குப் பின்னர் ஜேய்பீம் படத்தை பார்க்க நேர்ந்தது.

உண்மையில் ஜேய்பீம் என்றால் என்ன பொருள் என்பது கூடத் தெரியவில்லை! ஒரு சில தேடுதலுக்குப் பின்னர் புரிந்து கொண்டேன்! பீம் என்பது பீமராவ் -  - டாக்டர் அம்பேத்காரைக் குறிக்கிறது என்பதாக!

ஜேய்பீம் படம் ஒரு குறிப்பிட்ட இருளர் சமூகத்தைச் சார்ந்த பழங்குடி மக்களைப் பற்றியான ஒரு படம். அவர்கள் நாடற்றவர்கள். எந்த உரிமைகளும் இல்லாத மக்கள்.  அதிகாரம் படைத்தோர் எப்படியெல்லாம் அவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள் என்பது தான் கதை.  தனது கணவனை இழந்த ஒரு இருளர் பெண் தனக்கு நீதி கிடைக்க வேண்டும்  என்பதற்காக 13 ஆண்டுகள் போராடி கடைசியில் வெற்றி பெறுகிறார்.

படத்தில் வரும் அனைத்துச் சம்பவங்களும் உண்மையானவை. கற்பனைத் தேவைப்படவில்லை!

தமிழர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் நம்மால் உருவாக்கப் பட்டவை. எவ்வளவு உயர்ந்த ஜாதிக்காரனாக இருந்தாலும் அவன் தமிழன் தான். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் அவன் தமிழன் தான்!  இருளனும் தமிழன் தான்; வன்னியனும் தமிழனும் தான். உயரத்தில் இருப்பவன் தாழ்ந்த நிலையில் இருப்பவனுக்குக் கை கொடுத்து தூக்கிவிட வேண்டும்.  அது தான் இயற்கையின் நியதி. ஆனால் நமது குணமோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது!  தாழ்ந்தவனை இன்னும் அடிமட்டத்திற்குக் கொண்டு போக எல்லாவித காரணங்களும் வைத்திருக்கிறோம்! தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைக் கைத்தூக்கி விட்டாலே போதும் தமிழர் சமுதாயம் முன்னுக்கு வந்துவிடும். ஏற்றத் தாழ்வுகள் மறைந்துவிடும்.

இந்தக் கதை  ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் நடந்தது என்று சொல்லிவிட முடியாது. இப்போதும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த திரைப்படம் வெளிக்கொணர்ந்த பிரச்சனைகளைப் பார்த்தபின்  தமிழக முதல்வரே நேரில் தலையிட்டு இருளர்களுக்கு எல்லாவித உரிமைகளும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அவர்கள் வாழ்க்கையில் இனி வசந்த வீசும் என்று நம்புகிறோம்!

No comments:

Post a Comment