Tuesday 23 November 2021

ஆனாலும் இது முடிவல்ல!


மலாக்கா மாநிலத்தில் பக்காத்தான் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை! அதற்காக பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிமை குறை சொல்ல வேண்டிய அவசியமுமில்லை!

குறைகளைக் கண்டு பிடிப்பதைவிட இந்த தேர்தல் பக்காத்தான் கட்சிக்கு ஒர் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பக்கத்தான் கட்சி சென்ற தேர்தலில் மலாக்காவில் வெற்றிப் பெற்று ஆட்சியை அமைத்த  ஒரு கட்சி.  அக்கட்சிக்கு மக்களின் ஆதரவு இன்னும் உண்டு என்பதில் ஐயமில்லை.  பக்காத்தான் அரசாங்கம் கவிழ்க்கப்படாத நிலையில் இருந்திருந்தால் அவர்கள் தனது சாதனைகளைக் காட்டி வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த பெருமை போய்விடாதவாறு அரசை   கவிழ்ப்பதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் பாரிசான் கட்சியினர்!

இந்த தேர்தலில் கூட பாரிசான் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதாக சொல்லிவிட முடியாது. பல தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும் எதிர்பார்த்தபடி இல்லை.  கோவிட்-19 தொற்றினால் மக்கள் வெளியே வந்து வாக்களிக்கவில்லை. அதே சமயத்தில் மக்களை நேரடியாகச் சந்திக்கவும் வாய்ப்புக் கிடைக்கவில்லை! இப்படி ஒரு சில காரணங்கள்!

இருந்தாலும்  ஜனநாயகத்தில் ஒரு வாக்கு அதிகம் என்றாலும் அது வெற்றி தான்! அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்! 

இனி வருங்காலங்களில் - அடுத்த பொதுத் தேர்தலில் -  சூழல் எப்படி இருக்கும்?  கோவிட்-19 பெயரைச் சொல்லி மீண்டும் மக்களைச் சந்திக்க இயலாமல் தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டையாக இருந்தால் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும்! தேர்தல் ஆணையம்:"ஒரு கண்ணில் வெண்ணைய் மறு கண்ணில் சுண்ணாம்பு" என்று செயல்படத்தான் செய்யும்! அவர்கள் ஆளும் கட்சியின் ஆணையைத்தான் நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்! அதில் ஆச்சரியம் இல்லை!

எப்படியோ அனைத்தும் முடிந்து விட்டதாக நினைக்க ஒன்றுமில்லை. அப்படி நினைக்கவும் முடியாது! இன்னும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. இனி அடுத்த ஐந்து ஆண்டு கால மலாக்கா மாநில ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதும் பாரிசான் கட்சியினருக்கு ஒரு பாடமாக அமையப் போகிறது என்பதும் உண்மை!

காடேக் தொகுதியில் மீண்டும் ம.இ.கா. வேட்பாளர், சண்முகம் வெற்றி பெற்றிருக்கிறார்.  வாழ்த்துகள்!  இனி வரப்போகும் காலங்களில் அவருடைய சாதனைகள் தான் அவருக்கு வெற்றியைக் கொண்டு வரவேண்டும்.  அங்குள்ள இறந்தவர்களுக்கான ஈமச் சடங்குகள் செய்ய ம.இ.கா. வால்  ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாக நீண்டகால குற்றச்சாட்டு ஒன்று உண்டு. சாமிநாதன் இடத்தைக் கண்டுபிடித்தார் ஆனால் அவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் அவரால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

இனி எல்லாமே உங்கள் சாதனைகள் என்னவென்று தான் கேட்கப் போகிறார்கள். பாரிசான் கட்சி ஆண்டாலும் உங்கள் சாதனை என்னவென்று தான் கேட்கப்படும்.  பக்கத்தான் கட்சி ஆண்டாலும் உங்கள் சாதனை என்கிற கேள்வி தான் எழும்.

ஆக, பக்காத்தானுக்கு இது முடிவல்ல! ஆரம்பம்!

No comments:

Post a Comment