Saturday 10 June 2017

வலிமையான சமுதாயமாக மாறுவோம்


தமிழர்கள் வலிமையான சமுதாயமாக மாற வேண்டிய காலக்கட்டம் இது.

நாம் எந்த நாட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம்;  எந்த ஊரில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெள்ளையர்களுடன் வாழலாம்; கறுப்பர்களுடன் வாழலாம். தமிழர்கள் நாம், உலகின் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கு வாழ்ந்தாலும் நாம் ஒர் யூதனைப் போல வாழ வேண்டும். பொருளாதாரா வலிமை என்றால் அது உலகளவில் யூதனைச் சார்ந்து தான் இருக்கிறது. அந்தப் பொருளாதார வலிமை என்று ஒன்று இல்லாததால் தான் நாம் தாழ்ந்தவர்களாகவும், தலைகுனிந்தவர்களாகவும் ஏதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்று மலேசியாவில் நடைபெறுவது என்ன?  ஏன் நாம் வீழ்ந்து கிடக்கிறோம்? நாம் பொருளாதார வலிமையைப் பெற தவறி விட்டோம். ஏன்? வாய்ப்பில்லையா? எல்லாம் உண்டு. ஆனால் நம்மிடம் நேர்மை இல்லை.  சீக்கிரமாக ஏமாற்றி, சிக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் வீழ்ச்சி அடைகிறோம்.

பொருளாதாரம் என்பது மந்திரத்தால் மாங்காய் விழும் கதை அல்ல.  நேர்மை வேண்டும், உழைப்பு வேண்டும், உறுதி வேண்டும். நமக்குச் சரியான எடுத்துக்காட்டு என்றால் அது நம்மைச் சுற்றி இருக்கும் சீனர்கள் தான். அவர்களை நாம் குறைச் சொல்லித் தான் பழகி இருக்கிறோமே தவிர அவர்களின் கடும் உழைப்பை நாம் மறந்து விடுகிறோம். அவர்களின் தொழிலில் அவர்கள் காட்டும் அக்கறையைச் சாதரணமாக  எடுத்துக்கொள்ள முடியாது.  அது போல நம்மைச் சுற்றி இருக்கும் குஜாராத்தி வியாபாரிகளைப் பாருங்கள்.  அவர்களிடம் தோல்வி என்பது இல்லையே.  அவர்களால் எப்படி முடிகிறது? 

அவர்களும் நம்மைப் போல வங்கிகளில் கடன் வாங்கித்தான் தங்களது தொழிகளை வளப்படுத்துகிறார்கள்.  ஆனால் அவர்கள் வங்கியில் கடன் வாங்கினால் அதனைக் கட்ட வேண்டும் என்னும் தொழில் நாணயம் இருக்கிறது. அதனால் சீனர்களுக்கோ அல்லது குஜாராத்தியருக்கோ வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்குவதில்லை. ஆனால் நாம் ஏன் வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லை என்பதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை வைத்திருக்கிறோம். தொழில் தொடங்கும் முன்னரே யார் கடன் கொடுப்பார்கள் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்!

நண்பர்களே! நமது சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பொருளாதார வலிமை என்பது மிக முக்கியம். அல்லது கல்வியில் வெற்றி பெற வேண்டும்.தனி மனிதனாக நமது வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ச் சமூகம் என்று வரும் போது நாம் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கிறோம். அதனை நாம் சரி செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் உதவுகின்ற மனப்பான்மையை வளத்துக் கொள்ள வேண்டும்.

நாம் வெற்றி பெறுவோம்! நமது வலிமையை உலகிற்குக் காட்டுவோம்! வாழ்த்துகள்!                                                                                                    

No comments:

Post a Comment