Saturday 3 June 2017

ஆதரவு கரம் நீட்டுங்கள்...!

 இப்போது நம் இனத்தவர் பலர் சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயத்தில் அவர்கள் அதனைத் தொடர்வதும் தொடராததும் நமது கையிலும் உண்டு. சிறு வியாபாரிகளை ஒதுக்கும் மனப்போக்கு நம்மிடம் உண்டு. இத்தகைய மனப்போக்கு நமது சிறு வியாபாரிகளைப் பாதிக்கும்.

இன்றைய பெரும் பெரும் நிறுவனங்கள் ஒரு காலத்தில் சிறு சிறு  வியாபாரங்களாகத் தொடங்கப்பட்டவைகள் தான். அப்படித்தான் வளர வேண்டும். அது தான் வளர்ச்சி.

சிறு வியாபாரங்கள் என்னும் போது ஐஸ் வியாபாரம், நாளிதழ் விற்பனை,நாசி லெமாக், கரிபாப், வடை வகைகள், இளநீர் விற்பனை,  செண்டோல் வியாபாரம் .....பட்டியல் இப்படி நீண்டு கொண்டே போகும்.

வெறும் வடை,உருண்டை பக்கோடா, அதிரசம் என்று சந்தையில் வியாபாரம் செய்யும் ஒரு நண்பரைத் தெரியும். கணவனும், மனைவியும் சேர்ந்து செய்கின்றனர்.  அது ஒரு சிறு வியாபாரம் தான்.  அவர்களுக்கு இது முழு நேர வேலை. சிறு வியாபாரமாகச் செய்வதால் அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. சொந்த வீடு, கார்,  பிள்ளைகளுக்குத் தரமானக் கல்வி அனைத்தும் கொடுத்து விட்டனர். விலைவாசி ஏற்றம், இறக்கம் அனைத்தும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் வியாபாரத்தை விடுவதாக இல்லை. அது அவர்களின் பிழைப்பு. வியாபாரத்தில் மேடு பள்ளங்கள் உண்டு. அனைத்தையும் எதிர்க்கொள்ளத் தான் வேண்டும். அதனை அவர்கள் சிறப்பாகவே செய்கிறார்கள்.

நண்பர்களே! நீங்கள் பார்க்கின்ற சிறு வியாபாரிகளுக்கு உங்களின் ஆதரவு கரத்தை நீட்டுங்கள். அவர்களிடம் பொருட்களை வாங்குங்கள். உங்களின் ஆதரவைக் காட்டுங்கள். அவர்களைக் கொளரவியுங்கள். தமிழராய் இருந்தால் "முதலாளி" என்று சொல்லிப் பெருமைப் படுத்துங்கள். இது போன்ற செயல்கள் அவர்களை ஊக்கப்படுத்தும். அவர்களிடம் பேரம் பேசாதீர்கள்! முதலாளி என்று அவர்களை நீங்கள்  அழைக்கும் போது அது அவர்களை முதலாளி என்னும் உயர் நிலைக்கு அவர்களை உயர்த்தும்.

இதோ எனக்கு அருகில்,  ஒரு வங்கிக்கு வெளியே, ஒரு வயதானப்  பெண்மணி பலவிதமான பலகாரங்களை நெகிழிப்பைகளில் வைத்து  வியாபாரம் செய்கிறார்.  வங்கி திறந்திருக்கும் நாள்களில் அவர் அங்கு உட்கார்ந்து கொண்டு வியாபாரம் செய்கிறார். அந்த வியாபாரமும் அவருக்கு ஏதோ ஒரு வழியில் அவர் குடும்பத்திற்கு உதவியாகத்தான் இருக்கின்றது.

எனது பள்ளி நாட்களில் ஒர் இஸ்லாமிய நண்பர் ஏதோ ஒரு சில தமிழக வார, மாத இதழ்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நான் அவரை முதலாளி என்று தான் அழைப்பேன். பெரிதாகச் சொல்லுவதற்கு அவர் ஒன்றும் பெரிய வியாபாரி அல்ல. ஆனால் சில வருடங்களில் உணவகத் தொழிலுக்கு அவர் மாறினார். அடுத்து சில வருடங்களில் ஓர் உணவகம் இரண்டாக மாறியது.

இன்னொரு நண்பர் கடை ஐந்தடியில் துணியை விரித்து பேனா, பென்சில், முகம் பார்க்கும் கண்ணாடி என்று வியாபாரம் செய்து வந்தார். அடுத்து ஓரிரு வருடங்களில் அருகில் கிடைத்த ஒரு டீ, காப்பி ஸ்டால் ஒன்றை வாடகைக்கு வந்தது. துணிந்து எடுத்தார். பின்னர் அவருக்கு ஏறுமுகம் தான்!

சிறு சிறு வியாபாரங்கள் செய்வதில் கேவலம் எதுவும் இல்லை. இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அந்தத் தொழிலில் கிடைக்கும் தன்னம்பிக்கை. ஒரு தொழில் செய்யும் போது அதில் கிடைக்கும் துணிவு, நம்பிக்கை.

இன்று நம்முடைய பிரச்சனைகள்  எல்லாம் நமக்கு நம் மேல் நம்பிக்கை இல்லை. தொழில் செய்ய வேண்டும் என்னும் துணிவு இல்லை.  அப்படியே செய்கிறவர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்து விடுகிறோம்.  எவன் தோல்வி அடைந்தானோ அவனைச் சுட்டிக் காட்டுகிறோம். வெற்றி பெற்றவனை மறந்து விடுகிறோம்.

கடைசியாக, நம் சிறு வியாபாரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம். அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுவோம். நமது சமூகம் வியாபாரம் ஒன்றின் மூலமே வெற்றி பெற முடியும் என்பதை நிருபித்துக் காட்டுவோம்.

வெற்றி பெற வாழ்த்துகள்!




No comments:

Post a Comment