Sunday 4 June 2017

தியாகி சங்கரலிங்கனார்


நமது முன்னோர்கள் ஒரு சிலரையாவது நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பலர் இருப்பினும் நாம் மறக்க முடியாத பெயர் சங்கரலிங்கனார். தமிழ் நாட்டிற்கு "தமிழ் நாடு" என்று பெயர் வைக்கப் போராடி 76 நாட்கள்  உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர்  பெரியவர் சங்கரலிங்கம். விருதுநகர் மாவட்டத்தில் 1895 - ல் பிறந்தவர். தந்தையாரின் பெயர் கருப்புசாமி; தாயார் பெயர் வள்ளியம்மை. பெருந்தலைவர் காமராசர் படித்த அதே பள்ளியில் சங்கரலிங்கமும் எட்டாம் வகுப்பு வரைப் படித்தவர்.

சென்னை ராஜ்யம் என்று அழைக்கப்பட்டு வந்த தமிழ் நாட்டை "தமிழ் நாடு" என பெயர் வைக்கக் கோரி அவர் 27 ஜூலை 1956 அன்று தனது உண்ணவிரதத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தாலும்  அவரின் வேண்டுகோளை அன்றைய காங்கிரஸ் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பெயர் மாற்றம் என்பது உணர்ச்சியைத் தூண்டும் சமாச்சாரம் என்பதாகக் கூறி  காமராசர் தலைமையிலான அரசாங்கம் அதனைப் புறக்கணித்துவிட்டது.  சங்கரலிங்கனாரின் கனவு நிறைவேறாமலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் 1956 அக்டோபர் 10-ம் தேதி அவர் மரணமடைந்தார்.                                                                                                                                                                                                                                                                                                                                                      
சங்கரலிங்கனார் எந்த எதிர்கட்சியையும் சார்ந்தவர் அல்ல. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சர்ந்தவர். காந்தியுடன் தண்டியாத்திரையில் கலந்து கொண்டவர். பழுத்த காங்கிரஸ்வாதி. அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பள்ளி ஒன்றுக்கு எழுதி வைத்துவிட்டார்.

தியாகி சங்கரலிங்கனார் இறந்த பிறகு அவருடைய "தமிழ் நாடு"  கோரிக்கைக்கு தொடர்ந்து பலர் குரல் கொடுத்தனர். 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி இந்திய  நாடாளுமன்றத்தில் தமிழ் நாடு என பெயர் மாற்றம் சட்டம் நிறைவேறியது.

அதன் பின்னர் தமிழ் நாடு பெயர் மாற்றம் என்பது தி.மு.க. வின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. தியாகி சங்கரலிங்கரனார் முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டார்.  ஒரு தமிழனின் தியாகம் நினைவு கூறப்படவில்லை. சமீபகாலத்தில் தான் அவருக்கு ஒரு மணிமண்டபம் விருதுநகரில்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அவர்களால் அமைக்கப்பட்டு காணொளியின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment