Wednesday 28 June 2017

கல்லூரிகளிலும் பிரச்சனையா?


இந்திய உணவகங்களுக்கு எங்கிருந்தாலும்  பிரச்சனைகள் ஓய்வதில்லை! வெளியே - நகர்ப்புறங்களில் உணவகங்கள் வைத்தால் - அதை கெடுப்பதற்கு அதிகாரிகள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் எங்கிருந்தோ வந்துவிடுகிறது! சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்று சொல்லி ஒரு மாசத்துக்கு இழுத்து மூடுங்கள் என்று உத்திரவிடுகிறது. அப்படி இல்லையென்றால் ஷரியா சட்டத்தை மீறிவிட்டாய் என்று இன்னொரு குரல்!  உணவகங்களுக்குக் கூட ஷாரியா சட்டமா?  ஒன்றுமே புரியவில்லை! எது தான் ஷாரியா சட்டம்?

சரி, இந்தத் தொல்லைகளையெல்லாம் சமாளித்து வெளியாகும் போது வெளி நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பதாகக் கெடுபிடி. அட!  இங்கு உள்ள உணவகங்கள்,   வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இல்லாமல் இயங்க முடியாது என்பதைக் கூடவா நமது அதிகாரிகளுக்குத் தெரியாது? 

இப்படி அராஜகம் வெளியே தலைவிரித்தாடும் போது கல்லூரிகளுக்கு உள்ளே அங்கும் கசமுசா, கசமுசா!  கல்லுரிகளில் உணவகங்கள் நடத்துவது என்பது சாதாராண விஷயம் அல்ல. அங்கும் பாவம்,  காலைப் பிடித்து, கையைப்பிடித்து, பணத்தைக் கொடுத்து பல்லிளித்து உணவகங்களை நடத்தும் போது தீடிரென்று நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, கடவுள்பற்று அனைத்தும் தலைமையாசிரியர்களுக்கு வந்து விடுகிறது!

சமீபத்தில் செபராங் பிறை, தொழில்நுட்பக் கல்லூரியில் உணவகம் நடத்தி வந்த இந்தியர் ஒருவரின் கடை இழுத்து மூடப்பட்டது! ஒரே காரணம் அவர் முஸ்லிம் அல்ல என்பது தானாம்! இப்படியும் ஒரு காரணமா என்று நாம் தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடியும். அந்த உணவகம் நடத்தியவர் ஷாரியா விதிமுறைகளின் படி நடத்தவில்லையாம்!  அங்குப் படிக்கின்ற மாணவர்களில் சுமார் 300 பேருக்கு மேல்  இந்தியர்கள். அந்த மாணவர்களுக்கு அந்த ஒரே உணவகம் தான் அவர்களுக்கு ஏற்ற உணவை வழங்கக் கூடியது. காரணம் மற்ற உணவகங்களில் மாட்டிறைச்சி பயன்படுத்துவர். அங்கு அது பயன்படுத்துவதில்லை. இதற்காக ஷாரியா விதிமுறைகள் என்று சொல்லி பயமுறுத்துவது ஒரு கல்விகழகத்துக்கு ஏற்றதல்ல.

ஆனாலும் இதற்கு யார் பொறுப்பு?  யாரும் எவரும் கவலைப்படப் போவதில்லை. யார் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. அந்த இந்திய மாணவர்கள்  தாங்கள் இருக்கின்ற காலத்தில் முடிந்தால் சைவ உணவுக்கு மாறிக்கொள்ள வேண்டும். அதுவும் மலாய் சைவ உணவு!

No comments:

Post a Comment