Monday 19 June 2017

நவீனின் மரணம் ஒரு பாடம்


சமீபத்திய நவினின் மரணம் பெற்றோர்களுக்கு நல்லதொரு பாடம்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கவனிப்பதில்லை; அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது தெரிவதில்லை; அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதில் அக்கறைக் காட்டுவதில்லை.

எந்நேரமும் வேலை, வேலை, வேலை! என்ன செய்வது பிழைப்பு நடக்க வேண்டும். கார் தவணைக் கட்ட வேண்டு. வீட்டு வாடகைக் கட்ட வேண்டும் அல்லது மாதத் தவணைக் கட்ட வேண்டும். பிள்ளைகளின் கல்விக்குச் செலவழிக்க வேண்டும். இன்னும் பல கடன் சுமைகள்.

இவைகள் எல்லாம் சராசரியாக எல்லாருக்குமே உள்ள கடன் சுமைகள் தான். இப்படித்தான் மலேசிய இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.

இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே தான் அவர்கள் வேலைக்குப் போக வேண்டும்; பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இவைகள் எல்லாம் எல்லாப் பெற்றோர்களுக்கும் உள்ள பிரச்சனைகள் தான். 

ஆனால் இந்தச் சூழலலிருந்து தான் பல பிள்ளைகள் பள்ளி போகிறார்கள்; படிக்கிறார்கள்; பட்டதாரியாகிறார்கள். சாதனைகள் புரிகிறார்கள். வீட்டுக்கும்  நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறார்கள்.   அதே சமயத்தில் ஒருசில குடும்பங்களிலிருந்து குண்டர் கும்பல்கள், ரௌடிகள், குடிகாரர்கள் - இப்படியும் உருவாகிறார்கள்!  அப்படி என்ன தான் நடக்கிறது? ஒரு பக்கம் கல்விக்கு முக்கியத்துவம். தங்களை விட தங்கள் பிள்ளைகள் இன்னும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்னும் பெற்றோர்களின் வைராக்கியம். இன்னொரு பக்கம் தினசரி சினிமா! சினிமா! சினிமா! தொலைக்காட்சி பெட்டிக்கு  ஒய்வே இல்லை! குடிக்கின்ற அப்பன்! எந்நேரமும் அடி, உதை, குத்து, வெட்டு - இது போன்ற பேச்சுக்கள்! சிறு குழந்தையிலேயே வீரத்தை ஊட்டி ஊட்டி வளர்க்கின்றார்களாம்! கடைசியில் அடி உதையைச் சொல்லிக்கொடுத்த அப்பனையே அடித்து உதைத்து விட்டு சிறைக்குப் போகிறார்கள் பிள்ளைகள்! இது வீட்டிலும் நடக்கலாம், வெளியேயும் நடக்கலாம்; எங்கும் நடக்கலாம்.

பெற்றோர்களே! அனைவரும் சேர்ந்து உழைக்கிறீர்கள். கேட்டால் பிள்ளைகளுக்காகத்தானே என்கிறீர்கள். நீங்கள் உழைக்கும் பயன் பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும். அது எந்த வகையிலும் வழக்குகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் போய்ச் சேரக் கூடாது! நமது பிள்ளைகளுக்கு நல்ல தரமானக் கல்வியைக் கொடுப்பது நமது கடமை. கல்விக்காக அரசாங்கம் எவ்வளவோ செலவழிக்கிறது. நாம் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தோல்விகளுக்கு அரசாங்கத்தைக் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நவீனின் மரணம் பெற்றோர்களுக்கு ஒரு பாடம்.  நாம் இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு  நாம் வழிகாட்டாவிட்டால் அவர்கள் நம்மை வழக்குகளுக்கு வழி காட்டுவார்கள்!

No comments:

Post a Comment