Thursday 8 June 2017

ரஜினியால் ஊழலை ஒழிக்க முடியுமா?


ரஜினி பதவிக்கு வந்தால் அது முடியுமா, இது முடியுமா என்று இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன! நல்லது தான்.  இந்தக் கேள்வி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் கேட்க முடியாது. அவரால் முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

ரஜினியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கும் போதே அவரால் முடியும் என்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ரஜினியால் ஊழலை ஒழிக்க முடியுமா என்பதாக ஒரு கேள்வி. அதுவும் தமிழ் நாட்டில் இது நடக்கக் கூடிய காரியமா என்பதெல்லாம் நியாயமான ஒரு கேள்வி தான். காரணம் அந்த அளவுக்கு ஊழல் என்பது தமிழகத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

தமிழ் நாட்டில் ஊழல் என்பது  ஐம்பது ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்டது.   முதல் ஊழல் குற்றச்சாட்டு கலைஞர் கருணாநிதி மேல் தான் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அவர் பதவியை வைத்து அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன! தமிழ் நாட்டில் ஊழலில்  முன்னோடி என்றால் கலைஞர் தான்!  இப்போது ஊழல் என்பது தமிழகத்தையே ஆட்டிப் படைக்கின்றது. ஒன்றுமே செய்ய முடியாதா என்னும் குரல் இப்போது ஒங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றுமே செய்ய முடியாதா? முடியும்,  என்பது தான் எனது பதிலாக இருக்கும். அதுவும் ரஜினி போன்ற ஆளுமைகளால் நிச்சயம் முடியும். அவர் பலரைப் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். அதானாலென்ன? அது தெரிந்து தானே அவர் அரசியலுக்கு வருகிறார்! சினிமாவில் அவர் தனியாக எதிரிகளைத் துவம்சம் பண்ணிணார். நிஜ வாழ்க்கையில் காவல்துறை அவர் கையில் தானே!  சட்டதிட்டங்கள் கடுமையான முறையில் அமலாக்கம் செய்யப் பட்டால் யார் ஊழல் செய்வார்? இப்போது சட்டதிட்டங்கள் எல்லாம் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்கப்படுகிறதே தவிர அமலாக்கத்தில் அசட்டையாக இருக்கிறதே! அது தானே இன்றைய நிலை? அமலாக்கம் இல்லை என்பது தான் இன்றைய நிலைக்குக் காரணம்.!

ஒரு முதல்வர் என்பவர் அந்த மாநிலத்தின் முதன்மையானவர். அந்த மாநிலத்து மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர். அவரே நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தால் பொது மக்களின் நிலை என்ன? எடுத்துக்காட்டுக்கள் சரியாக இல்லாததே இன்றைய நிலைக்குக் காரணம். ரஜினி போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனை அல்ல. நாட்டைக் கொள்ளையடிக்கும் அளவுக்கு அவருக்குப் பணம் பற்றாக்குறை இல்லை. ஆனால் அந்தப் பணப்பற்றாக்குறை  கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்தது! தமிழ் நாட்டின் இன்றைய நிலைக்கு இவர்கள் தான் காரணம்!

மேல் மட்டத்தில் அனைத்தும் சரியாக இயங்கும் போது கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் வாலைச் சுருட்டிக்கொள்வார்கள்! இப்போது மேல் மட்டத்தில் விவரிக்க முடியாத அளவுக்கு ஊழல் மலிந்து கிடக்கிறது!  அதன் எதிரொலி தான் கீழ் மட்டத்திலும் எதிரொலிக்கிறது. ஊழலை ஒழிக்க முடியாது என்பதாக ஒன்றும் இல்லை.  "ஊழல் ஒழிக!" என்று சொல்லுகின்ற திராணி இப்போதுள்ள எந்தத் தலைவருக்கும் இல்லை! ஊழலிலேயே வளர்ந்து விட்டவர்கள் ஊழலை ஒழிக்க முடியாது! அதனைச் சொல்லுவதற்கு ஓரிரெண்டு தலைவர்களால் தான் முடியும்.  அதற்காக ஊழலை ஒழிக்கவே முடியாது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்!

ரஜினி தன்னுடைய முதல் அறிவிப்பிலேயே "என்னை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னோடு வர வேண்டாம்!" என்று முதலிலேயே ஓர் அறிவிப்பைச் செய்து விட்டார்!  அதனால் ஊழல்வாதிகளை அவர் அண்ட விடமாட்டார் என்று நம்பலாம்.

ஊழலை ஒழிக்க முடியும். அது தமிழகத்தை ஆளப் போகும் அரசியல்வாதிகளைப் பொறுத்தது! கடுமையான நடவடிக்கைகளே அதற்கானத் தீர்வு.

ஊழலை ஒழிக்க ரஜினியால் முடியும்!




No comments:

Post a Comment