Friday 23 June 2017

ம.இ.கா. செய்யுமா?


ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர், சிவராஜ் சந்திரனுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.  நாடெங்கிலும் மெகா மைடாஃப்தார் நிகழ்ச்சிகள் மூலம் பிறப்புப் பத்திரம் இல்லாதவர்களுக்கு இப்போது மீண்டும் பதிவுகளை செய்ய ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. ஏற்கனவே செய்யப்பட்டவைகள் என்ன ஆயின என்பது பற்றிப் பேசிப் பயனில்லை! எதிர்கட்சியினர் பிறப்புப் பத்திரம் இல்லாதவர்கள், அடையாளக்கார்டுகள் இல்லாதவர்கள் 3,00,000 பேர் என்கின்றனர். நீங்களோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் கணக்கின்படி சுமார் 3,000 பேர் என்கிறீர்கள். 

உங்களின், ம.இ.கா.வின் சேவைக்கும், எதிர்கட்சியினர் செய்கின்ற சேவைக்கும் வித்தியாசம் உண்டு.  உங்களை நாடி வருபவர்களை விட எதிர்கட்சியினரை நாடுபவர்கள் அதிகம் என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது! அது மக்களின் குற்றம் அல்ல. ம.இ.கா. என்றோ மக்களிடமிருந்து வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டது. இருந்தாலும் உங்களின் சேவை இன்னும் இந்நாட்டு இந்தியர்களுக்குத் தேவை என்பது தான் உண்மை. அது உங்களுக்குத் தெரியாவிட்டாலும் எங்களுக்குத் தெரிகிறது.

சமீபத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கையில் ஒர் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்: உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியும் இன்னும் நிலுவையில் இருக்கும் 2,575 குடியுரிமை பிரச்சனையை" தீர்த்து வைக்கும்படி ம.இ.கா. வைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இவைகளெல்லாம், பிறப்புப் பத்திரம், அடையாளக்கார்டு,குடியுரிமை, எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு உடைய பிரச்சனைகள் தான். நீங்கள் பதிவு, பதிவு என்று சொல்லிக் கொண்டு பதிவு செய்வதும் பிறகு மக்கள் பதில், பதில் என்று அலைந்து கொண்டிருப்பதும் தொடர்கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது! ஏற்கனவே உள்ள பிரச்சனைகளைக் கலையாமல் இன்னும் புதிது புதிதாக பதிவு செய்தே கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏதோ தற்காலிகக்  குஷி கிடைக்கலாம்!  மற்றபடி மக்களுக்கு என்ன பயன்?

நீங்கள் செய்வதெல்லாம் ஏதோ தற்காலிக தேர்தல் யுக்தி என்பதத் தவிர மக்களுக்கு இதனால் பயனில்லை! அதனால் இப்போது உங்கள் கண்முன்னே இருக்கின்ற இந்த 2575 குடியுரிமைப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுங்கள்.  உடனடியானத் தீர்வு தான். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. அதற்குத் தீர்வு கண்டு அவர்களும் வருகின்ற தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள். இதன் மூலம் தான் உங்களின் நேர்மை, உண்மை, துணிவு அனைத்தும் எங்களுக்குத் தெரியவரும்.

சும்மா வெற்றறிக்கையால் யாருக்கும் பயனில்லை. எதிர்கட்சியினரிடம் ஆதாரத்தைக் காட்டுங்கள் என்பதெல்லாம் பிரச்சனையை இழுத்துக் கொண்டு போவதே தவிர பிரச்சனைக்கு முடிவு காண்பதல்ல! மைடாஃப்தார் ஒரு பக்கம் நடக்கட்டும். குடியுரிமைக்கும் முடிவு காணட்டும். 

இதுவே நமது வேண்டுகோள்.  கேட்கின்ற இடத்தில் நாங்கள் இருக்கிறோம். செய்கின்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். சாக்குப்போக்குகள் இல்லாமல் செய்யுங்கள். இந்தச் சமுதாயம் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும்.

"செய் அல்லது செத்து மடி" இது சமுதாயத்தின் குரல்!

ம.இ.கா செய்யும் என எதிர்பார்க்கிறோம்.


No comments:

Post a Comment