Friday 16 June 2017

தமிழக ஆட்சி கவிழுமா...?


தமிழ் நாட்டில் விரைவில் ஆட்சி கவிழும் என்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.

ஆனால் எந்த அளவுக்கு இது உண்மை? கவிழுமா? கவிழாதா? அ.தி.மு.க. வினர் வேண்டுமானால் அடித்துக் கொள்ளலாம்; கடித்துக் கொள்ளலாம். பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கலாம். ஆனால் நடப்பது அவர்களது ஆட்சி இல்லையே! அ.தி.மு.க. வினர் இன்னும் மீதம் உள்ள நான்கு ஆண்டு காலத்தை எப்படியாவது நகர்த்திக் கொண்டு போவதையே விரும்புவார்கள்.  மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்னும் நோக்கம் என்பதெல்லாம் அவர்களுக்குக்  கிடையாது. இந்த நான்கு ஆண்டு காலத்தில் இன்னும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது தான் அவர்களது நோக்கம்.

அடுத்த ஆட்சி அ.தி.மு.க. அமைக்கும் என்பது இனி மேல் நிறைவேறப் போவதில்லை. அதனை அவர்களே அறிவார்கள். இது தான் அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு.  தமிழ் நாட்டில் இன்று உள்ள பிரச்சைனைகளை எதனையும்  அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பதே போதும் அவர்கள் தமிழ் நாட்டில் இனி தலை துக்க முடியாது என்பது!

நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக்கடைகளை மூட வேண்டும் என்னும் உத்தரவு வந்ததும் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்? கிராமங்களில், சிறு சிறு பட்டணங்களிள் - ஏற்கனவே அங்கு சாராயக்கடைகள் உள்ளன என்று தெரிந்தும் - இவர்கள் ஆங்காங்கே திறக்க ஆரம்பித்தனர்.  சாராயக்கடைகளைத் திறக்க ஏன் இவ்வளவு வேகம்? அவர்கள் வேகத்தை வேறு எதிலும் காட்டவில்லையே?  காரணம் இந்தச் சாராயக்கடைகளை நடத்துபவர்களே இந்த அரசியவாதிகள் தான்! யார் இந்த அரசியவாதிகள்? சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்கள், காவல்துறையைச் சார்ந்தவர்கள் -எல்லாருக்குமே இதில் பங்கு உண்டு. இவர்களுக்குப் பணம் தான் முக்கிய நோக்கம். ஆட்சி நல்லபடியாக நடக்க வேண்டும் என்னும் நோக்கம் இல்லாதவர்கள்.

இதனையே நடுவண் அரசான பா.ஜ.க. வும் விரும்புகிறது. தொடர்ந்து இவர்களையே பதவியில் வைத்துக்கொண்டு இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ய வேண்டும். இது வரை முன்னாள் முதலமைச்சர்களலால் ஏற்றுக்கொள்ளப் படாத சில சட்டத்திருத்தங்களை இந்தக் கோமாளிகளை வைத்தே நடுவண் அரசு சாதித்துக் கொண்டது. இனி மேலும் தமிழகத்துக்குப் பாதகமான அத்தனையும் அவர்கள் சாதித்துக் கொள்ள ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடரத்தான் செய்யும். எப்படியோ, தேர்தல் என்று ஒன்று வைத்தால் பா.ஜ.க. வெற்றிப் பெற போவதில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். அதனால் இந்தக் கோமாளிகளின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் இன்னும் தமிழ் நாட்டுக்குப் பாதகமான என்ன என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்ய நடுவண் அரசுக்கு இந்தக் கோமாளிகளின் ஆட்சி அவர்களுக்குத் தேவைப் படுகிறது!

இந்தக் கோணத்தில் பார்க்கும் போது தமிழ் நாட்டில் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்க்க முடியாது. இவர்களால் நடுவண் அரசுக்கு ஒரு நிம்மதி. மீனவர் பிரச்சனையோ, விவசாயிகளின் பிரச்சனையோ எதனையும் அவர்கள் கண்டு கொள்ளப் போவதில்லை! இவர்களும் எதனையும் கேட்கப் போவதில்லை! அதனைத் தான் நடுவண் அரசும் விரும்புகிறது.

அதனால் தமிழ் நாட்டில் அரசு கவிழும் என்று எதிர்பார்ப்பதற்க்கில்லை!

No comments:

Post a Comment