Saturday 17 June 2017

இளைஞர்களே, திருந்துங்கள்


இளைஞர்களே! உங்களுக்கு என்ன தான் வேண்டும்? உங்களைப் புரிந்து கொள்ளுவதற்கு யாருமே இல்லையா? பெற்றோர்களும் புரிந்து கொள்ள முடியவில்லை; உற்றாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.நண்பர்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் என்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடம் வெளியே அல்ல உள்ளே! காவல்துறை மட்டும் தான் உங்களுக்குப் பாடம் கற்பிக்க முடியும்.

பள்ளி மாணவன் நவீனனின் இறப்பு ஒரு சாதாரண விஷயம் அல்ல.  இசைத் துறையில் சாதனைப் படைக்க நினைத்த ஒரு சாதனையாளனை சாகடித்து விட்டார்கள் அவனோடு படித்து சக மாணவர்கள். அவனது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

பள்ளியில் படிக்கின்ற போது மிகவும் சாதுவாக ஒரு மாணவன் இருந்தால் அவனைக் கேலி செய்வதும், பகுடி பண்ணுவதும் மாணவரிடையே இயல்பு தான். ஆனால் நவீனோடு படித்த மாணவர்கள் பள்ளியோடு அதனை நிறுத்திக் கொள்ளாமல் அதனைப் பள்ளிக்கு வெளியேயும்  கொண்டு சென்றிருக்கின்றனர்.

இது ஏதோ பினாங்கில் நடந்து ஒரு சம்பவம் தானே என்று எடுத்துக் கொள்ள முடியாது. எல்லா மாநிலங்களிலும் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பள்ளியின் முன் மோட்டார் சைக்களில் ஊர்வலம் வந்த மாணவர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியிருக்கின்றனர். 

நமது மாணவர்கள் பல சாதனைகள் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இன்னொரு பக்கம் அராஜகம் செய்வதிலும் நம்மை நடுங்க வைக்கின்றனர். இப்படி ஒரு தூண்டுதல் எங்கிருந்து இவர்களுக்கு  வருகிறது?  நமது எல்லாப் பழக்க வழக்கங்களும் வீட்டிலிருந்து தான் வருகின்றன என்பது தான் உண்மை. இவர்கள் எந்தப் பின்னணியில் வளருகிறார்கள்? குற்றப் பின்னணி என்றால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.   அவர்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் சிறை தான். வேறு வழியில்லை. ஒரு சக மாணவனை கொடூரமாக கொலைச் செய்தவர்களை யாரால் மன்னிக்க முடியும்? இனி இவர்கள் வெளியே வந்தாலும் வெளியே உள்ளவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பார்கள் என்பது தானே உண்மையாயிருக்கும்.

அந்த நவீனுக்காக மனம் அழுகிறது.

No comments:

Post a Comment