Sunday 14 January 2018

தூவானம் விடவில்லை...!


மழை விட்டும் தூவானம் விடவில்லை! 

ஒவ்வொரும் ஆண்டும் புதிகாகப் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு நமது கல்வி அமைச்சின் மூலம் பல சோதனைகள், பல  இடர்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டும். ஆனால் செல்ல முடியவில்லை. காரணம் அவர்கள் இந்நாட்டுப் பிரஜைகள் அல்ல.  இது தான் காரணம்! உப்புச் சப்பில்லாத ஒரு காரணம்!  இங்குக் குற்றம் பெற்றோர் மேல் இல்லை.  அவர்கள் குடியுரிமைக்கு மனு செய்திருக்கிறார்கள்.  ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சில் கணினி பயன்பாட்டில் இல்லை! அதனால் அவர்களால் "ஆம், இல்லை' என்று பதில் சொல்ல பல ஆண்டுகள் ஆகின்றன!

அதற்காகக் குழந்தைகள் ஏன் பழிவாங்கப் பட வேண்டும்? குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பது  ஒவ்வொரு நாட்டின் கடமை. அதனை மலேசிய அரசாங்கம் அறிந்திருக்கிறது. 

இங்கும் ஓர் அரசியல் நாடகம் நடந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். துணைப் பிரதமர் நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேர எந்தப் பிரச்சனைகளும் இல்லை என்கிறார்!  இப்போதுள்ள பிரச்சனை கல்வி அமைச்சு ஒரு பக்கம் முடியம் என்கிறது ஒரு பக்கம் முடியாது என்கிறது! குடிநுழைவுத்துறை ஒரு முறை 'ஆம்' என்கிறது, ஒரு பக்கம் 'இல்லை' என்கிறது! தலமையாசிரியர் 'முடியும்' ஆனால் 'முடியாது' என்கிறார்! இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் இவர்கள் திட்டமிட்டே இந்தக் குழந்தைகள் அனைவருக்கும்   கல்வி கொடுக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்பது  தெளிவாகிறது

இங்கு நாம் முக்கியமாகக் குற்றம் சாட்டுவது கல்வி அமைச்சை மட்டும் தான்.  கல்வி அமைச்சின் அதிகாரிகள் "நாங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல" என்று குட்டி நெப்போலியன்களாகச் செயல்படுகிறார்கள்!  அவர்கள் அப்படிச் செயல்படுவதற்கு காரணம் யார்? யார் அவர்களைத் தூண்டி விடுகிறார்கள்? யார்? அதே துணைப்   பிரதமரின் அலுவலுகமோ என்று நாம் சந்தேகப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே நமது கணிப்பு. துணைப் பிரதமரின் அறிவிப்பை அலட்சியம் செய்யும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்களா கல்வி அமைச்சின் அதிகாரிகள்? அவர்களின் ஆசி இல்லாமல் இவர்களால் இப்படி அலட்சியம் செய்ய முடியுமா?

ஆக இவர்கள் எல்லாம் சேர்ந்து அரசியல் நாடகம் ஆடி மக்களுக்குத் தொல்லைத் தருகிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதுவும் இந்தியர்களின் பிள்ளைகள் என்றால் எதுவும் செய்யலாம் என்கிற அலட்சியம் இவர்களுக்கு வந்து விட்டது! இதுவே மலாய்க்காரப் பிள்ளைகள் என்றால் இந்நேரம் கைலியைத் தூக்கிக் கொண்டு களத்தில் இறங்கிருப்பார்கள் அம்னோவினர்! ம.இ.கா. காரனுக்கு அடுத்து எந்த நடிகர் பட்டாளத்தை இங்குக் கொண்டு வரலாம் என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறான்!

இவர்கள் எல்லாம் குழந்தைகள். வருங்காலத் தலைமுறை கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பழி போடுவதை நிறுத்தி ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!


No comments:

Post a Comment