Friday 19 January 2018

ஆங்கிலம் படியுங்கள்!


"ஆங்கிலம் படியுங்கள்!" இது தான் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு மலேசிய முதாலாளிகளின் கூட்டமைப்பு கொடுக்கும் அறிவுரை.

"உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை இருந்தும் உங்களுக்கு அந்த வேலை கொடுக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு ஆங்கிலத்தில் திறன் போதாது என்று அர்த்தம்!  பல நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பட்டதாரிகள் ஆங்கிலத்தில் பேசும் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றன!  ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அந்தப் பட்டதாரிகளை அந்நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன!" என்கிறார் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஷம்சுடின் பார்டன்!

பொதுவாக எல்லா நிறுவனங்களுமே ஆங்கிலத் திறன் கொண்டவர்களையே வேலைக்கு அமர்த்துகின்றன. ஏன், நமது மலாய்க்காரர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் கூட ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் கடித போக்குவரத்துக்களை வைத்துக் கொள்ளுகின்றன.  பேசுவதில் சரியோ, தவறோ எழுதுவதில் சரியோ, தவறோ புரிந்து கொண்டால் சரி என்னும் மனப்போக்கில் தான் ஆங்கிலம் எழுதப்படுகின்றது அல்லது பேசப்படுகின்றது! அவர்களின் அந்தத் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். சும்மா 'தெரியவில்லையே' என்று கூனிக்குறுகுவதை விட முடிந்தவரை சமாளிப்போம் என்கிற அந்தத் துணிச்சல் பாராட்டுக்குரியது. ஆனாலும் அந்த இடத்திலேயே நின்று விடாமல் மேலும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் சிறப்பு.

இன்றைய நிலையில் நாம் வலைத்தளங்களுக்குச் சென்றால் நமக்கு என்ன தேவையோ அவைகள் கிடைக்கும். ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. அதுவும் பட்டதாரிகள் என்றால் மிக எளிதாகவே ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளலாம். பட்டம் பெறுகின்ற அளவுக்கு ஒரு மாணவனுக்குத் திறமை இருக்கிறது என்றால் ஆங்கிலம் படிப்பதற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு சில மாதங்களே போதும் கற்றுக்கொள்ளலாம்.  ஆனால் நம்மால் ஆங்கிலம் படிக்க முடியாது என்று  யாரோ நம் மனத்தில் விதைத்த விதை  அப்படியே நம் மனதில் தங்கி நம்மை அடுத்தக் கட்டத்திற்குப் போக முடியாமல் முட்டுக்கட்டையாக்கி விட்டது. எதனையும் ஒரு சில பயிற்சிகளின் மூலம் சரி செய்து விடலாம். செய்து விட முடியும் என்னும் நம்பிக்கை நமக்கு வேண்டும். 

ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழி அல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக நம்மிடையே புழக்கத்தில் உள்ள ஒரு மொழி. அதே போல மலாய், சீனம், தமிழ் - இந்த மொழிகள் எல்லாம்  நமக்குப் பரிட்சையமான மொழிகள் தான். இந்த மொழிகள் எல்லாம் எல்லாக் காலங்களிலும் நம்மைச் சுற்றி ஒலித்துக் கொண்டிருக்கும் மொழிகள்! அதனால் ஏதோ ஒரு வகையில் இந்த மொழிகள் பேசும் போது நமக்கு அந்நியமாகத் தெரிவதில்லை. நமக்கு ஓரளவாவது இந்த மொழிகள் பேசப்படும் போது நமக்குப் புரியத்தான் செய்கின்றன. ஆனால் நமக்கு ஆங்கிலம் புரிந்தால் மட்டும் போதாது. பேசவும், எழுதவும் அதுவும் வர்த்தகத் துறைக்கு மிகவும் முக்கியமான ஒரு மொழி. அதனைக் பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ளுவது இன்றைய பட்டதாரிகளுக்கு இன்றியமையாதது.

அதனால் ஆங்கில மொழியைக் கற்போம். அந்த மொழியில் பாண்டித்தியம் பெறுவோம்! வெற்றி நமதே!


No comments:

Post a Comment