Sunday 7 January 2018

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு...!


"கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு, காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு!" என்பதாக ஒரு பழைய சினிமாப் பாடல். கவிஞர் மாயவநாதனின் ஒரு தன்முனைப்புப் பாடல் என்று    சொல்லலாம்.  

எல்லாக் காலங்களுக்கும் ஒரு பொருத்தமான பாடல்.  இப்போதும் நமது வாழ்க்கைச் சூழலைப் பார்க்கும் போது அந்தப் பாடல் பொருந்தும்.

கவலை இல்லாத மனிதர் யார்? அப்படி யாரும் இல்லை! இருக்கிறார்கள் என்று நீங்கள் அடம் பிடிப்பவராக இருந்தால்     அவர்களை ஒரே ஒரு இடத்தில் பார்க்க வாய்ப்புண்டு. எல்லா சுடுகாடுகளிலும் அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள்!  அவர்களிடையேயும் ஆவிகள் சண்டை உண்டா என்று தெரியவில்லை!

கவலைப்படாத மனிதரே இல்லை. கருவறையிலிருந்து கல்லறை வரை அது ஒரு தொடர் கதை. அம்மா கவலைப்பட்டால் குழந்தையும் கருவறையில் கவலைப்படும். அதனால் தான் கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.

நம்மைச் சுற்றி எவ்வளவு பிரச்சனைகள். ஒன்றா, இரண்டா? பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும்.  பிரச்சனைகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக் கசந்து போகும். ஆனால் பிரச்சனைகள் அதிகம் ஆகும் போது மனம் தளர்ந்து போகும் என்பது உண்மையே. 

ஆனால் பிரச்சனைகள் வரும் போது அதனை நாம் எப்படிக்           கையாளுகிறோம் என்பதில் தான் உள்ளது நமது வெற்றியும் தோல்வியும். நல்லதொரு ஆலோசனை உண்டு.  பிரச்சனைகளை பிரச்சனைகளாகப் பார்க்காதீர்கள். ஒரு வாய்ப்பாகப் பாருங்கள். பிரச்சனைகள் நமக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பிக்கும். பிரச்சனைகள் மூலம் தான் நாம் அனைத்தையும் கற்றுக் கொள்ளுகிறோம். 

நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, பிரச்சனைகள் நம்மைத் தேடி வந்து கொண்டு தான் இருக்கும். இல்லாவிட்டால் நம்மை அறியாமலேயே நாம் தேடிப் போய் கொண்டிருப்போம்! அது தான் வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் பாடம். பிரச்சனையை அது பிரச்சனையே அல்ல என்கிற ஒரு மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்! அப்படி ஒரு எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாமே நமது எண்ணங்கள் தான். கவலையை கவலையாகப் பார்க்காத வரை அது கவலையே அல்ல. இதுவும் கடந்து போகும் என்னும் ஒரு எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டால் கவலை என்று ஒன்று இருக்காது! பிரச்சனை என்று ஒன்றும் இருக்காது!

அது தான் கவிஞர் சொன்னார்: கவலையா? அது கிடக்கட்டும் மறந்துவிடு! அடுத்து என்ன? காரியம் நடக்கட்டும்! துணிந்து விடு!  துணிந்து காரியங்களை பார்க்க ஆரம்பித்து விட்டால் எல்லாக் கவலைகளும் ஓடிவிடும்!

No comments:

Post a Comment