Friday 5 January 2018

நல்லவரா? வல்லவரா?


சுப்பர் ஸ்டார் ரஜினி நல்லவரா, வல்லவரா? என்கிற வாதம் இப்போது தமிழகத்தில் எல்லாத் தரப்பிலுமிருந்து விவாதிக்கப் படுகின்றது!

சரி! நமது நாட்டு அரசியல்வாதிகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். 

துன் வீ.தீ.சம்பந்தனைப் பற்றி பேசும்போது பொதுவாக அவர் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர்.  மிகவும் மென்மையாகப் பிரச்சனைகளை அணுகுபவர். அவர் காலத்தில் அவர் படித்த படிப்பு மிகப் பெரிய படிப்பு. அரசியலில் தனது குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தவர். இந்தச் சமுதாயத்திற்காக அவர் இழந்தவைகள் அதிகம். ஆனாலும் அவரை இந்தச் சமுதாயம் குறை தான் சொல்லுகிறது. அவர் காலத்திய துன் டான் சியு சின் சீன சமுதாயத்தைப் பொருளாதார ரீதியில் பெரிய அளவில்  உயர்த்தியவர். ஆனால் துன் சம்பந்தன் பொருளாதாரம் என்று வரும் போது இந்திய சமுதாயத்தைக் கை விட்டவர் என்று இன்று வரை சொல்லுகிறோம்!  அப்போதைய பிரதமர் துங்குவோடு மிக நெருக்கமாக இருந்தவர். ஆனாலும் அவரை வைத்து நமது சமுதாயத்தை இவரால் உயர்த்த முடியவில்லை!     நல்ல மனிதர் ஆனால் வல்லவர் என்று அவரால் பெயர் எடுக்க முடியவில்லை!

இப்போது துன் சாமிவேலுவுக்கு வருவோம். வல்லவர் என்று பெயர் எடுத்தவர். ஆனால் நல்லவர் என்று இன்றுவரை அவரால் இந்திய சமுதாயத்தினரிடம் பெயர் எடுக்க முடியவில்லை! அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிருடன் மிக மிக நெருக்கமாக இருந்தவர். அவரால் முடியாதது என்று எதுவும் அரசியலில் இருக்கவில்லை! சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைத்தன. கல்வியா, பொருளாதாரமா அனைத்தும் அவரது கைக்குக் கிடைத்தன.  இந்திய சமுதாயத்தைப் பொருளாதார ரீதியில் உயர்த்தவோ, கல்வியில் உயர்த்தவோ அனைத்தும் அவரிடம் இருந்தன. அவர் வல்லவர் என்பதாலேயே அனைத்தும் அவரால் பெற முடிந்தது. அவரை எதிர்ப்பார் ஆளும் அம்னோ கட்சியில் கூட யாரும் இருக்கவில்லை. ஆனாலும்  அரசாங்கம் மூலம் கிடைத்த எதுவும் சமுதாயத்திற்கு வந்து சேரவில்லை!  அது தான் அவரது பலவீனம்! வல்ல அவர், நல்ல அவராக இருக்கவில்லை!

சரி! நமது இந்திய சமுதாயம் என்ன நிலையில் உள்ளது? நாம் நல்லவராக இருப்பது தான் மற்ற இனத்தவருக்குக் கேலிப் பொருளாக ஆகி விட்டது! நல்லவர் என்று பெயர் எடுப்பது மிகவும் சிரமம். நல்லவர் அத்தோடு வல்லவர் என்றும் பெயர் எடுக்க வேண்டும். சீன சமுதாயம் வல்லவர் என்று பெயர் எடுத்தவர்கள். நமக்கு இரண்டும் வேண்டும். நல்லவர்கள் என்னும் அடையாளத்தை நம்மால் மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் வல்லவர்கள் என்பதை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். 

இனி நாம் நல்லவராகவும் இருப்போம்! வல்லவராகவும் இருப்போம்!

No comments:

Post a Comment