Wednesday 24 January 2018

ஆயுதப்படையில் இந்தியர்கள்..!

முன்னாள் இந்திய முப்படை வீரர்கள் சங்கம் நல்லதொரு நிகழ்ச்சிக்கு முன்னாள் துணையமைச்சர் டத்தோ டி. முருகையா தலைமையில்  இந்திய இளைஞர்களை ஆயுதப்படையில் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

மிகவும் வரவேற்கத் தக்க ஒரு செயல். ஜாலான் ஈப்போ, இப்ராகிம் யாக்கோப் தேசிய இடைநிலைப் பள்ளியின் மண்டபத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 275  பேர் ஆயுதப் படையில் சேர விண்ணப்பித்ததாக "வணக்கம் மலேசியா" செய்தி கூறுகிறது.

ஆயுதப்படையில் அதிகமான இந்திய இளைஞர்கள் சேர வேண்டும் என்னும் முயற்சியில் இந்திய முப்படை வீரர்கள் சங்கம் இறங்கியிருப்பது பாராட்டுதலுக்கு உரியது. சில நேரங்களில் இது போன்ற நல்ல செயல்கள் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரும் போது இதுவும் ஒரு கண்துடைப்பா என்று நம்மை நினைக்க வைப்பது இயல்பே! பொதுத் தேர்தலை எதிர்பார்க்கும் இந்நேரத்தில் இந்த நிகழ்வு நம்மையும் ஐயுற வைக்கின்றது என்பது உண்மையே! 

இப்போது முன்னாள் முப்படையினர் செய்ய வேண்டிய வேலை என்ன? இந்த 275 பேரும் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டு விட்டனர் என்னும் நல்ல செய்தி வர வேண்டும்.  ஓரிரு மாதங்களில் வந்தால் மட்டுமே இதனை நாம் நம்பலாம். தேர்தலுக்குப் பின்னர் தான் செய்தி வரும் என்றால் ... இதனையும்....குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம்!  இதுவும் ஒரு கண் துடைப்பு வேலை என்று முடிவுக்கு வரலாம்! ஏன் "275 பேரும்" என்கிறோம்? இராணுவத்தில் பணிபுரியும் ஆர்வத்தில் உள்ளவர்கள் தான் இந்த விண்ணப்பங்களைச் செய்திருக்கின்றனர்.  வேறு யாரும் இந்த விண்ணப்பங்களைச் செய்ய வாய்ப்பில்லை.

அதனால் முப்படையினர் செய்த இந்த ஏற்பாட்டை உடனடியாகச் செயல் படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டு கோள்.  நேரடியாக விண்ணப்பம் செய்கின்ற போது ஏற்றுக்கொள்ளப் படாத விண்ணப்பங்கள் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருந்தாலும் முன்னாள் முப்படையினரின் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். அது பயனுடையதாக அமையவும் வேண்டும் எனவும் விரும்புகின்றோம். இங்கு அரசியல் இல்லை எனவும் நம்புகின்றோம். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment