Saturday 27 January 2018

ஆசிரியர்களா? குண்டர் கும்பலா?


ஆசிரியர்கள்,  குண்டர் கும்பல்கள் போல் நடந்து கொள்ளுவது  என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது! ஆசிரியர்களை மதிக்கும் ஒரு சமுதாயம் நாம். அதனால் தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பெற்றோருக்கு அடுத்து குரு அதற்குப் பின்னர் தான் தெய்வம். குருவுக்கு அடுத்து தான் தெய்வம் என்பது குருவுக்கு அந்த அளவுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அறியலாம்.

ஆனால் இப்போது ஆசிரியர்கள் இந்தத் தொழிலை ஏதோ பகுதி நேரத் தொழில் போல செய்து கொண்டிருப்பதால் அவர்களுக்கே அவர்களின் தொழிலின் மீது மரியாதை இல்லை. மாணவர்களின் மீது அன்பு இல்லை, அக்கறை இல்லை, அரவணைப்பு இல்லை  ஆனால் அடாவடித்தனம் அதிகம் இருக்கிறது!

ஒரு பதின்மூன்று வயது சிறுமி. பெயர் வசந்தபிரியா,  நிபோங் திபால் மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவி. இப்போது மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 

என்ன நடந்தது? அவருடைய ஆசிரியையின் கைப்பேசி காணாமல் போய்விட்டது. அதனை இந்த மாணவி தான் திருடினார் என்பதாக சந்தேகம். அதனை விசாரிக்க மூன்று ஆசிரியர்கள் - அனைவரும் இந்தியர்கள் என்று சொல்லப்படுகிறது - அத்தோடு அந்த ஆசிரியையின் கணவர் பக்கத்திலுள்ள வேறொரு பள்ளியில் ஆசிரியர். அவரும் இந்த விசாரணையில் வந்து கலந்து கொண்டார்!  ஆக, ஐந்து பேர். இந்த மாணவி தான் திருடினார் என்று ஒப்புக்கொள்ள வைக்க அந்த மாணவியை படாதபாடு படுத்தினர். எல்லா நெருக்கடிகளையும் கொடுத்தனர். இடைவேளையின் போது அவரைச் சாப்பிட அனுமதிக்கவில்லை.  ஆக அந்தக் குழந்தைக்கு மன உளைச்சளையும். மனத் துன்புறுத்தைலையும் கொடுத்தனர். அந்த மாணவியின் தந்தையும் வரவழைக்கப்பட்டு விசாரித்த போதும் அந்த மாணவி தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றே சொல்லியிருக்கிறார். அவரின் தந்தை அந்த ஆசிரியையிடம் தான் வேறொரு புதிய கைப்பேசி வாங்கித் தருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அந்த மாணவியோ தான் திருடவில்லை என்பதாகவே கூறி வந்திருக்கிறார். தான் திருடினேன் என்று அவர் ஏற்றுக்கொள்ள வில்லை.

அதன் பின்னரே அந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதாகக் கூறப்படுகிறது. கடைசியாக அவர் எழுதிய கடிதத்தில் தான் அந்தக் கைப்பேசிய திருடவில்லை என்பதை மீண்டும் உறுதிப் படுத்தியிருக்கிறார்.

நமது கேள்வி எல்லாம்: ஒரு வகுப்பில் மலாய், சீனர்,இந்தியர் என்று படிக்கின்றனர். ஆனால் ஓர் இந்திய மாணவியை மட்டும் "இவர் திருடினார்"  என்று எப்படி குற்றம் சாட்ட முடிகிறது?  வழக்கம் போல நமக்குப் புரியவில்லை! ஒரு கைப்பேசிக்காக ஓர் உயிரை வாங்கும் அளவுக்கு நமது ஆசிரியர்கள் தங்களது குண்டர் தனத்தைக் காட்டியிருக்கின்றனர்! 

அந்த மாணவியின் நலனுக்காக நாமும் பிரார்த்திக்கிறோம்.

No comments:

Post a Comment