Sunday 28 January 2018

ஆசிரியர்களுக்கும் தடை விதிக்க வேண்டும்!


பினாங்கு மாநில இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவரின் கைப்பேசி காணாமல் போனாதாகக் கூறி ஒரு மாணவியைக் கடுமையாக அச்சுறுத்தப் போக இப்போது அந்த மாணவி மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 14 வயது மாணவியான வசந்தபிரியா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு நெருக்கடி கொடுத்தாக அவருடைய ஆசிரியையும், அவருடைய கணவரும் மேலும் மூன்று ஆசிரியர்களும் அவரைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக  கூறப்படுகின்றது.



வசந்தபிரியா தான் தற்கொலை செய்து கொள்ளும் முன்னரும் அவர் அந்தக் கைப்பேசியை திருடவில்லை எனவும் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். 

இப்போது நாம் கேட்பதெல்லாம் கைப்பேசி பள்ளி நேரத்தில் அதுவும் வகுப்பறையில் ஆசிரியர்களுக்குத் தேவை தானா?  அதனை வகுப்பறையில் ஏன் வைத்திருக்க வேண்டும்?  அவர்களுடைய விலைமதிப்பற்ற கைப்பேசிகளை ஏன் பள்ளிகளுக்குக் கொண்டு வர வேண்டும்?

இதனைக் கல்வி அமைச்சு கடுமையான பிரச்சனையாகக் கருத வேண்டும். பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு எப்படி கைப்பேசி தேவை இல்லையோ அதே போல ஆசிரியர்களுக்கும் கைப்பேசி தேவை இல்லை.  அப்படியே கைப்பேசி தொலைந்து போனாலும்  ஆசிரியர்கள் அந்தப் பழியை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்களின் பொருள் மீது அவர்கள் தான் பொறுப்பு.

இதுவே ஒரு மலாய் மாணவியாக இருந்தால் இந்த அளவுக்கு அந்த மாணவி மீது இவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பார்களா - எடுத்திருக்க முடியுமா -  என்பதே நமது கேள்வி. ஓர் இந்திய மாணவி என்றால் எதனையும் செய்யலாம் என்று இந்திய ஆசிரியர்களே நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் செய்கின்ற தொழில் மீது  இவர்களுக்கு மதிப்பு, மரியாதை இல்லை என்றே நாம் நினைக்கத் தோன்றுகிறது! 

அந்த மாணவியின் நலனுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். சீக்கிரம் குணமடைய அவருடைய பெற்றோருடன் சேர்ந்த நாமும் எல்லா வல்ல இறைவனை வேண்டுவோம்.



No comments:

Post a Comment