Tuesday 15 February 2022

இலஞ்சம் தவிர்!

 



ஒன்றுமில்லை! இலஞ்சம் கொடுக்காதீர்கள்! இலஞ்சம் வாங்காதீர்கள்!

இது தான் செய்தி. ஊழலுக்குத் துணை போகாதீர்கள். ஊழலை நாம் தான் வளர்க்கிறோம்.  மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறோம். உரிமம் இல்லை! உடனே இலஞ்சம் கொடுக்க முயற்சி செய்கிறோம். உரிமம் இல்லாமல் கார் ஓட்டுகிறோம்.  தவறு செய்ததற்காக இலஞ்சம் கொடுக்கிறோம்! நமது நாட்டில் இப்படி இலஞ்சம் கொடுப்பதை அன்றாட செய்தியாகப் பார்க்கிறோம்.  நாமே குற்றங்களைப் புரிந்துவிட்டு போலீஸ்காரர்கள் இலஞ்சம் வாங்குகிறார்கள்  என்று குற்றம் சாட்டுகிறோம்.

இவைகள் எல்லாம் நாம் செய்கின்ற அலட்சியுங்கள். நாமே குற்றங்களைப் புரிந்துவிட்டு  பின்னர் நாமே அதிகாரிகளைக் குற்றம் சாட்டுகிறோம்.

இப்படி ஆரம்பிக்கப்பட்ட  இலஞ்சம், ஊழல் இன்று ஆலமரமாய் வளர்ந்துவிட்டது! நாம் தாங்க முடியாத அளவுக்கு அது பரந்து விரிந்து இப்போது நாட்டுக்கே ஆப்பு அடித்துக் கொண்டிருக்கிறது!

இன்று நாம் இந்தோனேசியாவைவிட பின்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். ஏன் தாய்லாந்தை விட நாம் அப்படி ஒன்றும் பெரிதாய் வளர்ந்துவிடவில்லை.  நமக்குப் பின்னால் வளர்ச்சியடைய முடியாத நிலையில் அவர்கள் இருந்த நிலை போய் இன்று அவர்கள் வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் கடவுளே இல்லை என்று சொல்லுகின்ற நாடுகளா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  நம்மிடம் போலித்தனம் அதிகம்!  கடவுள் பெயரைச் சொல்லியே கொள்ளையடிக்கிறோம்!

இலஞ்சம் ஊழல் என்பதெல்லாம் இப்போது தடம் 
 மாறிவிட்டது  முன்பு போலிஸ்,   அரசு அதிகாரிகள்  என்கிற நிலை இருந்தாலும் - இப்போதும் அது  தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது - அரசியல்வாதிகள்  இப்போது அதிகம் நாட்டையே திவால் ஆக்குகிற நிலைக்கு நாட்டை 'வழி' நடத்துகின்றனர்! 

ஊழல் முன்னாள் பிரதமர் நஜிப் காலத்தில் தலைவிரித்தாடியது என்றால் இப்போது  தலை, கை, கால் அனைத்துமே இஷ்டம் போல்  தோகை விரித்தாடுகிறது! அதனால் வருகின்ற பாதிப்பு என்னவென்று பார்த்தால்  விலைவாசிகள் ஏற்றம், வேலை வாய்ப்புக்கள் நசிந்து போனது இன்னும் நாம் என்னன்ன பாதிப்புகளை இன்று எதிர் நோக்குகிறோமோ அவை அனைத்தும் அரசியல்வாதிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை!  

உலக அளவில் இயங்குகின்ற நிறுவனங்கள் இப்போது நாட்டைவிட்டை வெளியேறுகின்றன. ஒரு சில நிறுவனங்கள் இந்தோனேசிய பக்கம் திரும்புகின்றன. இதற்கெல்லாம் காரணங்கள் என்ன   சுருக்கமாகச்  சொன்னால் ஆளும் வர்க்கம் செய்கின்ற அடாவடித்தனம் தான்!

பழையவர்கள் ஊழலில் ஊறிப் போய்விட்டார்கள். புதியவர்கள்  கொஞ்சம் தொட்டுக்கலாம் என்று பார்க்கிறார்கள்!

நாடு இப்போது இலஞ்சம் ஊழல் செய்கின்ற தரப்பினரிடமிருந்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது!

முடிந்தால் நாமும் மேலே உள்ள  Transparency International Malaysia வோடு ஒத்துழைப்போம்.

No comments:

Post a Comment