Sunday 20 February 2022

ஏற்றுக்கொள்ள தக்கதல்ல!

 

                                            Penang Mufti Wan Salim Wan Mohd Noor

பினாங்கு முப்தி அவர்களை மதிக்கிறோம். அவர் தனது கருத்தைக் கூறியிருக்கிறார்.

நமக்கும் நமது கருத்துக்களைக் கூற அவர் எங்களுக்கும் அந்த மரியாதையைக் கொடுக்க வேண்டும்.

அந்த மூன்று குழந்தைகளின் தாயார் படும் வேதனையை முப்தி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் இங்கு கேட்பதெல்லாம்  ஒரு குழந்தை இஸ்லாமிய இலாகாவினரிடம் 'அகப்பட்டுக்' கொண்டால்  உடனே அவர்களை மதம் மாற்றம் செய்ய வேண்டுமென்று  ஏதேனும் சட்டங்கள் உண்டா?  அவர்கள் எந்த மதத்தினர் என்று அறியாமல், அவர்களின் பின்னணியை அறியாமல்,  எங்களுக்கு அதெல்லாம்  தேவை இல்லை என்று இறுமாப்போடு செயல்படும் இஸ்லாமிய அதிகாரிகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மதம் மாற்றுவது குற்றம் என்று தெரிந்தும் அவர்கள் மதம் மாற்றம் செய்திருக்கிறார்கள். முதலில் அதற்கானத் தண்டனையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தண்டனை இல்லையென்றால் அவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்து கொண்டிருப்பார்கள். 

இது அவர்களின் முதல் தவறல்ல.  தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் இந்தியர்களின் மீது தொடர்ந்து  வன்மத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர் தாக்குதல்; ஏற்புடையதல்ல!

பினாங்கு முப்தி அவர்கள் சொல்லுவதை ஏற்றுக் கொண்டால் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்! நாம் அவர்கள் வாயைப் பார்த்துக் கொண்டு பொத்திக் கொண்டிருப்பது தான்.

நாம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மதத்தை நம் மீது திணிப்பது வன்செயலுக்கு ஒப்பாகும்.   இன்று நம்மிடையே பல மதங்கள்  இருப்பதே நம்மிடையே வேறுபாடுகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முப்தி அவர்கள் சொல்ல வருவது  எல்லாம் ஒன்றே ஒன்று தான். நாங்கள் செய்யத்தான் செய்வோம், நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் நம்மிடையே, இஸ்லாமியரும்-இந்துக்களும்,  ஒற்றுமையுடன் வாழ முடியும் என்கிறார் முப்தி.  அதாவது நல்லிணக்கம் என்பது  இதுதான். நாம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். அவ்வளவு தான்

நமக்கு மட்டும் தான் அந்த அறிவுரையைக் கொடுத்திருக்கிறார் முப்தி. காரணம் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றால் நாம் அனைவரும் அமைதியாகத் தான் போக வேண்டும் என்கிறார்.

நீதி, நியாயம் என்பது பற்றி பேசி காலத்தை வீணடிக்க வேண்டாம். மாற்றம்செய்துவிட்டால் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்! என்பது தான் அவர் அறிவுரை!.

ஆனாலும் முப்தி அவர்களே! உங்கள் அறிவுரையை  எங்களுக்கு மட்டும் சொன்னால் எப்படி? இது ஒருதலைபட்சமாக அல்லவா தோன்றுகிறது!

     

No comments:

Post a Comment