Wednesday 2 February 2022

தங்க அணிகலன்கள் வேண்டாமே!

 


இன்றைய நிலையில்  Food Panda என்றால் அறியாதவர் நம்மில் யாரும் இருக்க முடியாது. வேலை இல்லாதவர் எல்லாம் சிரமமான காலக்கட்டத்தில் உணவு வினியோகிப்பதை  ஒரு வேலையாகவே எடுத்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

இந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்களில்  பெரும்பாலும் மலாய், இந்திய இளைஞர்கள் தான். அது போல ஒரு சில பெண்களும் இந்த உணவு விநியோகத்தைச் செய்து வருகின்றனர். சீனர்கள் பெரும்பாலும் இந்தப் பக்கம் வருவதில்லை. குறைவான சம்பளம் என்றால்  அவர்கள் எட்டிக்கூட  பார்க்கமாட்டார்கள்! அது தான் அவர்கள் இயல்பு.

சமீபத்தில் ஒரு பெண் விநியோகிப்பாளர் தான் உணவு விநியோகம் செய்யப் போகும் போது இரு வெளிநாட்டு ஆடவர்  தனது  மோட்டார் சைக்களை வழிமறித்து, பாராங் கத்தியைக் காட்டி,  தான் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கொள்ளையடித்துச் சென்றதாக புகார் அளித்திருக்கிறார்.

நம் நாட்டில் நிறையவே வெளிநாட்டவர்கள் இருக்கிறார்கள். வேலை இல்லை என்றால் திருடத்தான் செய்வார்கள்.  அவர்களில்  பலருக்குக் குடும்பங்கள் உண்டு. அப்படி இல்லையென்றால் கூட அவர்களுக்குச்  சாப்பாடு வேண்டும். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

நமது ஆண்களோ, பெண்களோ ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்க நகைகள் போடுவதைத்  தவிருங்கள். அதுவும் இந்தியப் பெண்களுக்கு நகைகள் என்றால் உயிர். அதெல்லாம் இப்போது மாறிக்கொண்டு வருகிறது.  கொள்ளையடிக்கும் கூட்டம் தொடர்ந்து கொடுத்த தொல்லைகள், கொலை சம்பவங்கள் - இப்படி தொடர்ந்தாற் போல வந்த, வருகின்ற ஆபத்துக்கள் -  இதனையெல்லாம் நமது பெண்கள் புரிந்து கொண்டனர்.  அதனால் தங்க நகைகள் என்றாலே வெறுக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

தங்கம் கஷ்டத்திற்கு உதவும் என்கிற தத்துவம் எல்லாம் உதவாது. ஒரு வேளை கொள்ளையடிப்பவனின் கஷ்டத்திற்கு உதவலாம்!

அதனால் பெண்களே!  தங்க நகைகளை அணிவதைத் தவிருங்கள். எம்மாம் பெரிய பதவியில் இருந்தாலும் அது உங்களுக்கு ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை மறந்து விடாதீர்கள்!  நீங்கள் வங்கி லாக்கரில் போட்டு வைத்திருப்பதற்காக  நகைகள் வாங்கினால், அதனால் உங்களுக்கு இலாபம் இருக்கும் என்று நினைத்தால்,  தாராளமாக வாங்குங்கள்!

யாருக்கும் நட்டமில்லை!

No comments:

Post a Comment