Thursday 24 February 2022

சிக்கனம்! சேமிப்பு! சிக்கனம்! சேமிப்பு!

 


கொரோனா என்றாலே இப்போது நாம் பயப்பட வேண்டிய நிலைமையில் தான்  இருக்கிறோம்.  கடைசியாகப் படித்த செய்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 32,000 என்கிற அளவுக்கு உயர்ந்து விட்டது. . இந்த எண்ணிக்கை  என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

மீண்டும் பழைய - ஓராண்டுக்கும் முன்னர் - இருந்த நிலைமை மீண்டும் வருமா என்கிற அச்சம் வரத்தான் செய்கிறது. பயப்படத்தான் வேண்டியுள்ளது.

இப்போது ஏதோ ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறோம். பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அதனையும் சிக்கனம் பிடித்து சேமிக்க வேண்டும். இது கட்டாயம். 

மது அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம். அனாவசிய செலவுகளை நிறுத்தி விடலாம்.  திரை அரங்குகளில் போய் திரைப்படம் பார்ப்பதை  ஒதுக்கி விடலாம். இப்போது தொலைக்காட்சிகளில் புதிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதே போதும்.  நாம் கஷ்டப்படும் போது கதாநாயகர்கள் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் தான் பயணம் செய்யப் போகிறார்கள். நமக்குத் தேவை மூன்று வேளை உணவு, அவ்வளவு தான். நமக்கான வழிகளை நாம் தான் தேடிக்கொள்ள வேண்டும். 

நமக்குத் தேவை என்னும் போது நமது பணம் தான் நமக்குப் பலம்.  அதனை நாம் இறுக்கமாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு குறைவான சம்பளம் வாங்கினாலும்  அதிலும் ஒரு நூறு வெள்ளியாவது சேமிப்புப் பக்கம் திருப்பிவிட வேண்டும். இது  கட்டாயம். நமது பணத்தை நாம் சேமிக்கவில்லையென்றால்  வேறு யாரால் சேமிக்க முடியும்?

நாம் எல்லாக் காலங்களிலும் "சேமிக்க முடியாது!" என்று சொல்லியே பழகி விட்டோம்.  ஏன் முடியாது என்று நாம் கேள்வி கேட்பதில்லை. ஒவ்வொரு மாதமும் நமக்குப் பல செலவுகள் இருக்கின்றன. வீட்டு வாடகை, கார் மாதாந்திரத் தவணை - இப்படி இன்னும் பல தவணைகள் இருக்கலாம். ஆனால் நமது முதல் தவணை என்பது சேமிப்பு தான். முதலில் சேமிப்பு அதன் பின்னர் தான் மற்ற தவணைகள் என்கிற ஒரு  ஒழுங்கை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெரிய பெரிய சம்பளம் வாங்குவர்களால் தான் சேமிக்க முடியும் என்னும் மாயையிலிருந்து நாம் விடுபட வேண்டும். சேமிப்பு என்பது எல்லாருக்கும் தேவையானது.  அதில் சிறிய சம்பளம், பெரிய சம்பளம்  என்கிற வேறுபாடுகள் இல்லை. தனது தேவைகளை தனது வருமானத்திற்கு ஏற்றபடி  அமைத்துக் கொண்டு வாழ்பவர்களே வெற்றியாளர்கள். தேவைகளில் முதல் தேவை சேமிப்பு. அதனைக் கடைப்பிடிப்பவர்கள் வெற்றியாளர்கள்.

ஆமாம் நண்பர்களே! இந்த செய்தி நம் எல்லாருக்கும் தான். என்ன தான் கஷ்ட காலமாக இருந்தாலும் முதலில் சிக்கனம் அதனால் வருகின்ற சேமிப்பு. அதுவும் பண சேமிப்பு.  சொத்துக்கள் நிறைய இருக்கலாம். ஆனால் யாரிடம் பணம் கையிருப்பில் இருக்கிறதோ  அவர்கள் தான்  "கிங்" என்பார்கள்! அதாவது "மன்னாதி மன்னன்" நீங்கள் தான்! சொத்து வைத்திருந்தவர்கள் கூட நட்டத்திற்குத் தானே விற்க முடிந்தது!  மனக் கஷ்டத்தோடு தானே சொத்துக்களை விற்றார்கள்! இலட்சக்கணக்கில் பண இருப்புத் தேவையில்லை. ஒரு சில நூறு, ஒரு சில ஆயிரம்  என்பது உங்கள் பணம். ஆபத்து அவசர வேளைகளில் உங்களுக்கு உதவும்.

நண்பர்களே! அடுத்த கட்ட பிரச்சனைகள் வரும் முன்னே தயாராகி விடுங்கள். சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். சேமிப்பை வளர்த்துக் கொள்ளுங்கள். ராஜாவாக தலைநிமிர்ந்து நில்லுங்கள்!

No comments:

Post a Comment