Friday 4 February 2022

பணம் களவாடப்பட்டது!

பொதுவாக மித்ராவின் பணம் களவாடப்பட்டது என்றாலே நம் கண்முன் வருவது என்னவோ ம.இ.கா. தான்!

ம.இ.கா.வின்  முன்னாள் தலைவர் ஒரு  நிரந்தர அவப்பெயரைக்  கட்சிக்கு தனது ஞாபகார்த்தமாக விட்டுவிட்டுப் போயிருக்கிறார்! அதிலிருந்து விடுபட முடியவில்லை!

இந்திய சமூக உருமாற்றத்திற்காக அரசாங்கத்தால்  உருவாக்கப்பட்ட மித்ரா அமைப்பு கடைசியில் இந்திய சமூகத்திற்கு எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. குறைந்தபட்சம் இந்தியத் தலைவர்களுக்காவது மாற்றத்தைக் கொண்டு வந்ததே அதற்காகவாவது மகிழ்ச்சி அடைவோம்!

அமலாக்கத்தில் ஏற்பட்ட சில பலவீனங்களைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகிறது. ஆனால் பயப்பட வேண்டாம்!  அவர்கள் பெயர்களை வெளியிடமாட்டார்கள்! ஆளுங்கட்சி சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களுடைய பெயர்கள் வெளிவராது!  நாம் அது பற்றி  கவலைப்படப் போவதுமில்லை! அது தான் அரசியல்வாதிகளின் பலம்!

அமலாக்கத்தில் அப்படி என்ன பலவீனம்?  செலவினங்களுக்குச் சரியான ரசீதுகள் தேவை இல்லை! ரசீதுகளையும் சரிபார்க்க வேண்டும் அல்லது தணிக்கை செய்ய வேண்டும் என்பதும் இல்லை. எப்படி வேண்டுமானாலும்  வாங்கலாம், என்ன விலைக்கு வேண்டுமானாலும் வாங்கலாம், கேள்வி இல்லை பதில் இல்லை,  யாருக்கும் பொறுப்புமில்லை - இப்படி இருந்தால் யாருக்குத்தான் கொள்ளையடிக்க மனம் இல்லாமல் போகும்!

இப்படி ஒரு நிலவரம் இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? கூட இருப்பவனுக்குத் தானே தெரியும்! இயக்கம் ஆரம்பிப்பான்! ஒரு குத்தகை எடுப்பான்! அண்ணன், தம்பி, குடும்பம் என்று ஏதோ ஒரு பெயரில் ஏதையோ ஒன்றை ஆரம்பிப்பான்! பணம் கொட்டும்!

அதாவது யார் பொறுப்பில் இருக்கிறதோ அவனைச் சுற்றி உள்ளவர்கள் பயன் பெறுவார்கள் என்பது தான் உண்மை.

மித்ரா அமைப்பு என்பது எல்லாக் காலங்களிலும் ம.இ.கா. வுடன்  ஒட்டி உறவாடி வருகிற ஓர் அரசாங்க அமைப்பு. பணம் கொட்டுகிற ஓர் அமைப்பு.  ம.இ.கா. வுடன் நெருக்கத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் பயன் பெற்றவர்கள். அவர்களுக்குப் பணத் தேவை இல்லையென்றாலும் கூப்பிட்டுக் கூட கொடுப்பார்கள்.  சராசரிகள் பல காரணங்களைச் சொல்லி விரட்டி அடிக்கப்படுவார்கள்!

மில்லியன் கணக்கில் பணம் களவாடப்பட்டிருப்பதாக  ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகிறது! எப்படியோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை! அதுவும் நமக்குத் தெரிகிறது! என்ன செய்ய!

No comments:

Post a Comment