Thursday 10 February 2022

தொற்றின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்துகிறது!

 


நாட்டில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது  அச்சத்தை ஏற்படுத்துகிறது என நம்பலாம்!

"அச்சம் என்பது மடமையடா!" என்று யாரும் பாடும் நிலையில் இல்லை!

கோவிட்-19 தடுப்பூசி பெரும்பாலும் போட்டாகிவிட்டது. அதற்கு மேல் பூஸ்டர் ஊசியும் போடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்  தொற்றும்  குறையவில்லை என்னும் போது  யாருக்கும் அச்சம் வரத்தான் செய்யும். யாரை குறை சொல்லுவது?

நாம் மற்றவரையே குற்றம் சொல்லிப் பழகிவிட்டோம்! ஆக, ஒரு பிரச்சனை என்னும் போது யாரைக் குறை சொல்லுவது என்று ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!

ஆனால் நாமும் ஒரு குற்றவாளி தான் என்பதை நம்புவதற்கு மறுக்கிறோம்!  ஆமாம்,   சுகாதார அமைச்சு சொல்லுகின்ற நடைமுறையை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? அதுவே ஒரு கேள்விக்குறி! ஏதோ  கொட்டகை திறக்கப்பட்டதும் ஓடும்  கன்று காலிகளைப்  போல அவிழ்த்துக் கொண்டு ஓடுகிறோம்! என்ன அவ்வளவு அவசரம்? பிள்ளைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படும் ஜென்மமாகக் கூட நாம் இல்லை! பொறுப்புணர்வு என்பது நமக்கு வரவில்லை! படித்தவன், படிக்காதவன் அனைவருமே ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்கிறோம்!

பிரச்சனை என்பது நமக்கு மட்டும் அல்ல. நமது நாட்டு பிரச்சனை மட்டும் அல்ல. எல்லா நாடுகளிலிலும் உள்ள பிரச்சனை. உலகளாவிய பிரச்சனை.

சுகாதார அமைச்சு சொல்லுகின்ற எதனையும் நாம் கடைப்பிடிக்க தயாராக இல்லை! தடுப்பூசி போட மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள்! என்ன செய்ய? தடுப்பூசி ஒன்றே கொஞ்சமாவது பாதுகாப்புக் கொடுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நமது நாடும் அதனையே சொல்லுகிறது.

இந்த தொற்றுக்கு பணக்காரன், ஏழை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பட்டால் பட்டது தான். அடுத்த நாள் சஙுகு தான்!  மிகப் பெரிய உதாரணம் நடிகர் விவேக். அவரிடம் பணம் இல்லையா? போய் சேர்ந்துவிட்டாரே!

தொற்று அதிகமாகிக் கொண்டே போகிறது என்றால் ஒரு விஷயம் நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்று பலர் தடுப்பூசி போடாமலேயே போலி சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர்.  இது சாதாரண விஷயம் அல்ல. இவர்கள் நாடெங்கிலும் தொற்றை பரப்பிக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை. ஒரு வேளை நம்மிடையே கூட அவர்கள் இருக்கலாம்! ஆனால் நமக்குத் தெரிய நியாயம் இல்லை!

என்னால் அனுமானிக்க முடிந்தது ஒன்று தான்.  தடுப்பூசி போடாமலே போட்டுவிட்டதாக சான்றிதழ் வைத்திருக்கிறார்களே இவர்கள் தான் குற்றவாளிகள்! இவர்களைக் கண்டு பிடித்து தடுப்பூசி போடுவது தான் சுகாதார அமைச்சின் முதல் கடமை. அது மட்டும் அல்ல. அதற்கான தண்டனையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும், பொது மக்களுக்கு மிரட்டலாக இருக்கும் யாராக இருந்தாலும்  அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாரோ சிலரால், பொறுப்பற்ற சிலரால்,  நாம் பயந்து பயந்து வாழ முடியாது!

No comments:

Post a Comment