Thursday 10 February 2022

மருத்துவர்களா இவர்கள்?


சில செய்திகள் நம்மை வேதனைக்குள்ளாக்குகின்றன. 

பொறுப்பற்றவன், படிக்காதவன் இதனைச் செய்தால் மன்னித்து விடலாம். ஆனால் மருத்துவர்களே இப்படிச் செய்தால் என்ன செய்வது? அதுவும் கோவிட்-19  தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் இது போன்ற சம்பவங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இதில் மூன்று மருத்துவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கோவிட்-19-க்கு எந்த ஒரு சிகிச்சையும் பெறாமலே அவர்கள் சிகிச்சைப்  பெற்றுவிட்டதாக போலி சான்றிதழ்களை இவர்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்! ஒவ்வொரு சான்றிதழும் சுமார் 400 - 600 வெள்ளி வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

இதனைப் பார்க்கும் போது இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பது  நமக்குப் புரிகிறது. அதன் விலையைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை. அது அவர்களது பிரச்சனை.

ஆனால் தடுப்பூசி போடாமலே தடுப்பூசி போட்டதாக சான்றிதழ் கொடுப்பது என்பது எவ்வளவு ஆபத்தானது என்பது புரிந்திருக்கும். அரசாங்கம் அனைவரும் தடுப்பூசி போடுங்கள் என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும்  இந்த நேரத்தில் இப்படி ஒரு பக்கம் சான்றிதழ் கொடுத்து வந்தால் இது சுகாதார அமைச்சுக்கே சவால் விடுகிற ஒரு செயலாகவே நமக்குத் தோன்றுகிறது!

போலி சான்றிதழ் கொடுத்துவிட்டால் தடுப்பூசி போட்டதாக ஆகாது! அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்பது தான் பிரச்சனை. போலி சான்றிதழை வைத்திருப்பவர்கள்  சாவதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர்களின் உயிரைப் பற்றி அவர்களுக்கே கவலை இல்லாத போது நாம் கவலைப்பட ஒன்றுமில்லை! ஆனால் இவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து எந்நேரத்திலும் வரலாம். எத்தனை பேருக்கு வந்திருக்கிறதோ தெரியவில்லை! இனி மேலும் வரலாம்.

சுகாதார அமைச்சு  போலி சான்றிதழ் பெற்றவர்களைக் கண்டுபிடித்து  அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். இது தான் மிக மிக முக்கியம். காரணம் இவர்களால் மற்றவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நோயின் தாக்கம் ஏற்பட வழியுண்டு.

போலி சான்றிதழை விற்று வந்த, இந்த மருத்துவர்கள் செய்தது,  மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம். இது படிக்காதவன் செய்ய வழியில்லை. படித்தவன் இது போன்று சூது வாதும் செய்தால் "போவான்! போவான்! ஐயோவென்று போவான்!"  சரியாகச் சொன்னார் பாரதியார். அவன் எப்படிப் போவான் என்பது அவனுக்கே தெரியாது! ஆனால் நிச்சயம் போவான்!

அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது! நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோம்! ஆனால் பெரிய மீன்களை விட்டுவிட்டு சிறிய மீன்களைப் பிடிக்கும் வேலை வேண்டாம்! ஐயோவென்று நீங்களும் போக வேண்டாம்!

மருத்துவர்களா இவர்கள்! மருத்துவ நாதாரிகள்!

No comments:

Post a Comment