Thursday 10 February 2022

தாவல் சட்டம் தாவுகிறதா!

 

நாட்டில் என்று பாரிசான் கட்சி ஆட்சியை இழந்ததோ அன்றிலிருந்து ஆரம்பித்தது கட்சித் தாவுதல் என்னும் தரக்குறைவான தகரடப்பா ஆட்டம்!

தாவியவர்கள் தகரடப்பாக்களாக இருந்தாலும் இன்னொரு தலைமுறைக்கும் சேர்த்து பணம் சம்பாதித்து விட்டனர்!  ஆக, அரசியல்வாதிகளின் நோக்கத்தில் எந்த புனிதமும் இல்லை! அவர்களின் குடும்பங்களுக்குச் சொத்து சேர்ப்பது தான்  "மக்கள் குரலே மகேசன் குரல்!" என்னும் அவர்களின் கோஷம்!

முதலில் இப்படி ஒரு சட்டம் தேவை என்று சொல்லுபவர்கள் நேரம் வரும்போது தடாலடியாக மாறி விடுகின்றனர்! வெளியே பேசும்போது இது போன்ற சட்டங்கள் தேவை என்று பேசினாலும் உள்ளுக்குள் அது போன்ற சட்டத்தை  அவர்கள் விரும்புவதில்லை.

ஒரே காரணம் தான். அவர்களிடம் பேரம் பேச பணத்தை வைத்துக் கொண்டு பேசுகின்றனர். பணம் மட்டும் அல்ல, என்ன பதவி கொடுப்போம், என்ன பட்டம் கொடுப்போம் - இப்படி எல்லாம் பேசி தான் இவர்கள் தூண்டில் போடுகின்றனர்! கட்சி தாவுபவர்கள் தங்களுக்கு இந்த வாய்ப்பு இனி மேல் வராது அதனால் வருவதை வரவில் வைப்போம் என்று வெட்கம், மானம், சூடு சொரணை இல்லாமல் மாறி விடுகின்றனர். அதன் பின் அவர்கள் மக்கள் முன் நிற்கக் கூசுவார்கள்! தேர்தல் காலங்களில் ஆளே இருக்க மாட்டார்கள்! ஆனாலும் இதனை மீறி தேர்தலில் நிற்கிறார்கள் என்றால் அவர்களின் தொகுதிகளில் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கு அவர்களுக்கு உண்டு என்று கூறலாம்.

ஆனாலும் கட்சி தாவும் சட்டம் என்னும் போது அம்னோ எந்த அளவுக்கு ஆதரவு கொடுக்கும் என்று பார்த்தால் அது சந்தேகமே!  காரணம் கட்சி தாவுதல் என்று வரும் போது அதில் அதிகப்  பயன் அடைபவர்கள் அம்னோ கட்சியினர் தான்! அவர்களிடம் பணம் உண்டு. மற்ற கட்சியினரை வாங்கக் கூடிய சக்தி அவர்களிடம் உண்டு.  பணத்தை வைத்து மாநில அரசாங்கங்களை உடைத்தவர்கள் அவர்கள்! அவர்கள் அவ்வளவு எளிதில் கட்சி தாவுதல் சட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என நம்ப இடமில்லை!

ஒரு வேளை  அவர்களின் நிலை மிகவும் பலவீனமாக இருந்தால் அவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்பலாம். அவர்கள் பலவீனம் என்றால் எதிர்கட்சி பலத்தோடு இருக்கிறது என்று பொருள். எதிர்கட்சி பலத்தோடு இருந்து ஆளுங்கட்சியாக மாறிவிட்டால் கட்சி தாவுதல் சட்டம் எளிதாக  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விடலாம்!

ஆனால் எதனையும் உறுதியாகச்  சொல்ல இயலவில்லை. எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ, யார் கண்டார்! இதுவரை கட்சி மாறியவர்கள் என்றால்  அவர்கள் அனைவரும் எதிர்கட்சியில் இருந்தவர்கள் தானே! உறுதியான ஆட்சி நடுவண் அரசு கொண்டிருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இராது என்பது திண்ணம். எளிதாக நிறைவேறிவிடும்!

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் யோக்கியதைப் பற்றி இப்போது நம்மால் கணிக்க முடியாது!

இப்போதைக்கு இது தாவிக் கொண்டு தான் இருக்கும்! அரசியல்வாதிகளாயிற்றே!

No comments:

Post a Comment