Wednesday 7 December 2016

கேள்வி-பதில் (34)


கேள்வி

ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சி தானே?


பதில்

உண்மை தான். அவருடைய மறைவு என்பது அதிர்ச்சி செய்திதான். அவர் மறைவு என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

அவர் உடல் நலம் குன்றியிருந்தார் என்பது நாம் அறிந்தது தான். நாம் யாரையாவது  குற்றம் சொல்ல வேண்டும் என்றால் அவரது தோழி சசிகலாவைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.

எல்லாவற்றையும் மூடி மறைத்தார். அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது குடும்பமே ஜெயலலிதாவைச் சுற்றி நின்று கொண்டு யாரையும் நெருங்க விடவில்லை.

அந்த அளவுக்கு என்ன ரகசியத்தை அவர் மூடி மறைத்தார்? இப்போது சசிகலாவின் மீது கொண்டு வரப்படுகின்ற குற்றச் சாட்டுக்களில்  உண்மை இருக்கலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு மாநில முதல்வரை ஏதோ ஒரு சிறைக்குள் அடைத்து வைத்து ஒரு கைதியைப் போல நடத்தியிருக்கிறார் சசிகலா. இதற்கு அப்பல்லோவும் உடந்தை என்பதாகவே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு மாநில முதல்வரின் உடல்நிலையை அறிந்துகொள்ள அந்த மாநில மக்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.எந்த  ஒளிவு மறைவும் தேவை இல்லை.

இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புக்களும், தற்கொலைகளும், சேதங்களும் அனைத்தும் சசிகலாவின் பிழையான அணுகுமுறை தான் காரணம் என்பதில் ஐயமில்லை. ஆரம்பத்திலேயே அவருடை உடல்நிலை குறித்து அறிவிப்புக்கள் கொடுத்திருந்தால் - அவரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தால் - இந்த அள்வுக்குத் தற்கொலைகள் ஏற்பட்டிருக்காது. .தொடர்ந்தாற் போல அறிவிப்புக்களும் , புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்தால் அவருடைய தொண்டர்கள் நல்லதோ, கெட்டதோ அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்; மனதளவில் தங்களைத் தயார் படுத்தியிருப்பார்கள்.

ஆனால் கொடுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் நம்பிக்கை தரும் செய்தியாகவே இருந்தன.நடக்கிறார், பேசுகிறார், சாப்பிடுகிறார், அமைச்சர்களுக்குக் கட்டளையிடுகிறார் என்று  ஊக்கம்தரும் செய்திகளாகவே கூறிவிட்டு கடைசியில் தீடீரென இறந்து போனார் என்றால் எங்கோ, ஏதோ சரியாக இல்லை; ஒரு சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது.

எப்படிப் பார்த்தாலும் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு சசிகலா தான் காரணம் என்பதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment