Saturday 31 December 2016

விடை கொடுப்போம்..!

இன்றோடு 2016-ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. நாளை முதல் புதிய ஆண்டு. புதிய தொடக்கம்.புதிய புத்துணர்ச்சி. ஆண்டு புதிது. நாமும் புதிய மனிதனாக நம்மை மாற்றிக் கொள்ளுவோம்.

சென்ற ஆண்டைத்  திரும்பிப் பார்க்கும் போது எத்தனையோ செயல்கள். நாம் விரும்பியது, நாம் விரும்பாதது, நமக்குப் பிடித்தது, நமக்குப் பிடிக்காதது, நாம் சாதிக்க நினைத்தது, நாம் சாதிக்க முடியாமற் போனது என்று இழுத்துக்கொண்டே போகலாம்.

நம்மால் என்ன சாதிக்க முடிந்ததோ அதற்காக மகிழ்ச்சியடைவோம். நாம் எதிர்பார்த்தது நிறைவேறியதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.

நமது சாதனைகளுக்காக நன்றி! நாம் சாதித்தவைகளுக்காக நன்றி! நன்றி! சென்ற ஆண்டு நிறைவேறாமல் போனவைகளுக்காகவும் நன்றி சொல்லுவோம்! காரணம் நாம் சாதிக்கவில்லை என்றால் அது நமக்கு ஒரு பாடம். அது ஒரு பயிற்சி.

இந்த ஆண்டும் நாம் என்ன சாதிக்க வேண்டும் என்னும் ஒரு பட்டியலை வைத்திருப்போம். சென்ற ஆண்டு சாதிக்க முடியாததை இந்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்வோம்.

சென்ற ஆண்டு நாம் சாதிக்க முடியவில்லை என்றால் அதனை நாம் அனுபவமாக எடுத்துக் கொள்ளுவோம். முயற்சி செய்தோமோ அதுவே ஒரு சாதனை தான்! முயற்சி தான் முதல் படி. வெற்றிபெறவில்லையானாலும் அந்த அனுபவத்தின் மூலம் பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். அந்த அனுபவங்கள் தான் வருகின்ற ஆண்டு நாம் பெறப்போகும் வெற்றி.

சென்ற ஆண்டு நடந்தவைகள் அனைத்தும்  நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள். எது நடந்தாலும் அது நன்மைக்கே! தோல்வியாக இருந்தால் என்ன? அதன் மூலம் நல்லதொரு படிப்பினை நமக்குக் கிடைத்திருக்கும்.

தோல்வி என்று எதுவும் இல்லை.  அந்தத் தோல்வியுலும் ஏதொ ஒரு வெற்றி ஒளிந்து கொண்டிருக்கும். அதனை அலசி ஆராய்ந்தால் உங்கள் தோல்வியே உங்களுக்குக் கிடைத்த வெற்றியாகத் தெரிய வரும்!

எல்லாமே நமது எண்ணங்களில் தான் அடங்கி இருக்கிறது. வெற்றி என்றால் வெற்றி! தோல்வி என்றால் தோல்வி! தோல்வி என்றால் ஓர் அனுபவம். அது தான் உங்களை வெற்றிக்கு இட்டுச் செல்லும். எடுத்த எடுப்பில் யாருக்கும் வெற்றிகள் குவிந்து விடாது. எந்த முயற்சியாக இருந்தாலும் முதலில் தோல்வி தான் முட்டுக்கட்டையாக வந்து நிற்கும். அதன் பிறகு தான் வெற்றி தலையை நீட்டும்!

ஆக, சென்ற ஆண்டுக்கு விடை கொடுப்போம்! வருகின்ற ஆண்டை கை நீட்டி வரவேற்போம்! அத்தோடு,  வெற்றியே வருக! வருக!

No comments:

Post a Comment