Friday 9 December 2016

ஸ்ரீலங்கா அதிபரின் கம்பீர வருகை..!

       நன்றி: வணக்கம் மலேசியா - போலிஸ் புகாருடன்...........

ஸ்ரீலங்கா அதிபர் மைத்ரிபால சிரிசேனாவின் மலேசிய வருகை  என்பது மிகவும் கம்பீரமான ஒரு வருகை! மலேசியா என்றுமே அவருக்கு  மிகவும் நெருக்கமான ஒரு நாடு!  ஆளும் தரப்பினர் அவரின் வருகைக்காக காத்துக் கிடக்கின்றனர்!

அவரின் வருகையை மலேசியத் தமிழர்கள் எதிர்ப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலில்லை. அரசாங்கத்துக்குத் தெரியும். 'உங்கள் எதிர்ப்புக்களை எல்லாம் நாங்கள் மதிக்கவில்லை' என்பதே அவர்களின் கோட்பாடு!

ஒரு சிறிய கூட்டத்தின் ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் நாங்கள் பயந்து கொண்டு இருக்க முடியாது. என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

மேலும் ஸ்ரீலங்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழர்கள்.. அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டுமே தவிர தங்கள் விருப்பத்திற்கேற்ப  செயல்பட முடியாது என்பது அவர்கள் வாதம்!

மலேசியாவிலும் அது தானே நடந்து கொண்டிருக்கிறது? கோயில்கள் எந்த முன்னறிவிப்புமின்றி உடைக்கப்படுகின்றன. கோயில் சிலையில் தகர்த்தெறியப்படுகின்றன! சிறுபான்மையினர் இதனை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.மனிதாபிமானம் பற்றிப் பேசக்கூடாது என்பது தான் இங்கு உள்ள கொள்கையும்!

சரி! எப்படிப் பார்த்தாலும் சிரிசேனாவின் வருகையை நாம் தமிழர்கள் எதிர்த்துப் பயனில்லை என்று புரிகிறது. அரசாங்கம் அவரை ஆதரிக்கிறது. நமது எதிர்ப்புக்களைக் காட்டலாம். ஆங்காங்கே கொடிகள் பிடிக்கலாம். போலிஸ் புகார் செய்யலாம். ஒழிக என்று கூச்சல் போடலாம். கொடும்பாவி எரிக்கலாம். அனைத்தும் சிறிய அளவில் மட்டுமே செய்ய முடியும். வெளி உலகிற்கு எட்டாதவாறு தான் செய்ய முடியும்! ஆனாலும் செய்யத்தான் வேண்டும். தமிழ்ப்பத்திரிக்கைகளும் ஏதோ ஒரு பக்கம் வேண்டாத செய்தியாகப் போடலாம். அந்த அளவுக்குத் தான் அவர்களின் உரிமை!

தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு தமிழனும் சரித்திரம் படைப்பவன் தான். அந்த அளவுக்கு அவன் திறமைப் படைத்தவன்.இவனை ஒன்று சேர்க்க முடியாததால் தான் இன்று இவன் வீழ்ந்து கிடக்கிறான். இந்த வீழ்ச்சியால் தான் உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. ஆனால் இது தொடர் கதை அல்ல! விழுவது எழுவத்ற்குத்தான்!

அரசாங்கத்தில் நம்மைப் பிரதிநிதிப்போர் கொஞ்சம் அக்கறை காட்டினால் போதும். இது ஒரு பிரச்சனையே அல்ல. அமைச்சரவையில் பேசி மிக எளிதாக சிரிசேனாவின் வருகையைத் தடுக்கலாம்.ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. கொத்து கொத்துகாக மக்கள் கொல்லப்பட்ட போது கருணாநிதி தனது பிள்ளைகளின் பதவிக்காக ஆளாய்ப் பறந்து கொண்டிருந்தார். இங்கும் நமது அரசியல்வாதிகள் பதவிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!  எந்தப் போர் ஒய்ந்தாலும் இவர்கள் போர் ஓயப்போவதில்லை!

அப்படி ஓயும்வரை
 சிரி சேனாக்கள் கம்பீரமாக வருவார்கள்! போவார்கள்! நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!

No comments:

Post a Comment