Monday 12 December 2016

இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதில்லையா?


இந்தியர்களும், சீனர்களும் அரச மலேசிய விமானப்படையில் சேர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதாக விமானப்படைத் தளபதி ஜெனெரல் டான்ஸ்ரீ ரோஸ்லான் சாட் கவலைத் தெரிவித்திருக்கிறார் என்பதாக ஒரு செய்தி.

இது போன்ற செய்திகளைப் படிக்கும் போது நிச்சயமாக நமக்கு ஒன்று தோன்றும்.  எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அது விமானப்படையாக இருந்தாலும் சரி, கப்பற்படையாக இருந்தாலும் சரி நம் இந்திய இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தான் சரி. எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும் ...ஊகும்..  ஒன்றும் ஆகவில்லை!

இது போன்ற சூழலில் - ஒவ்வொரு முறையும் புறக்கணிக்கப்படும் போது - எந்த இளைஞன் வினானப்படைக்கு மனு செய்வான்? குறைவாக விண்ணப்பங்களே வருகின்றன என்று சொல்லுவதில் பயனில்லை.  இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதனால் தான் குறைவான விண்ணப்பங்கள் வருகின்றன என்பதை விமானப்படைத் தளபதி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டு முழுவதும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்பது சரி தான். நீங்கள் விளம்பரம் செய்வதோடு சரி. நீங்கள் இடைஇடையே இது போன்ற செய்திகளைக் கொடுப்பதோடு உங்கள் கடமை முடிந்துவிட்டது. அவ்வளவு தான்! ஆனால் ஆள் சேர்ப்பதற்காக நீங்கள் நியமித்திருக்கிறீர்களே அவர்கள் சரியாக இல்லையே! அவர்கள் மலாய்க்காரர்களுக்குத் தானே முன்னுரிமை கொடுக்கிறார்கள்!  அவர்களைத் தாண்டி போக முடியதே!

அதனால் தளபதி அவர்களே, உங்கள்  கவலை பொருளற்றது. இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை!

ஒவ்வொரு ஆண்டும் இத்தனை இந்தியர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒரு கட்டாயம் இல்லாதவரை இதற்கு ஒரு முடிவில்லை! நீங்கள் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள் நாங்களும் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்போம்!

No comments:

Post a Comment