Wednesday 7 December 2016

ஆனாலும் எங்களுக்குப் பஞ்சமே இல்லை!


அரசாங்கம் கட்டிய இருபது இலட்சம் வெள்ளி தமிழ்ப்பள்ளிளி!

நமது நாட்டில் என்னன்னவோ நடந்து கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும்,  அவர் இவரைக் குற்றம் சாட்டுவதும் இவர் அவரைக் குற்றம் சாட்டுவதும் என்பது மிகவும் சாதாரணம். அதுவும் அரசியால்வாதிகளாயிருந்தால் சொல்லவே வேண்டாம்!

நாட்டில் அரசியல்வாதிகளின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்! குற்றச்சாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை! ஆனால் யாரும் எவரும் எந்தக் குற்றச்சாட்டையும் ஒத்துக்கொள்ளுவதாகவும் இல்லை! அதனால் நாம் குற்றச்சாட்டுக்களைக் காதில் போட்டுக்  கொள்வதோடு சரி!

தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் நிறைய நிதி ஒதிக்கீடு செய்கிறது. அரசாங்கத்தின் கணக்குப்படி பார்த்தால் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் ஒரு கல்லூரிக்குச் சமமாக இருக்க வேண்டும்!  ஆனால் அரசாங்கம் கொடுக்கின்ற நிதி யார் கைக்குப் போகிறதென்று யாருக்கமே தெரியவில்லை! ஒன்று மட்டும் உறுதி. அப்பணம் பள்ளிகளுக்குப் போய் சேர்வதில்லை!

நிதி ஒதுக்கீடுகளுக்குப் பஞ்சமில்லை  நிதி போய் சேர்வதில் தான் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது! எந்தப் பஞ்சப் பராரிகளுக்குப் போய் சேருகிறது என்பது தான் புரியாத புதிர்!

இந்தியர்களை வியாபாரத் துறையில் ஊக்குவிக்க ஒரு திட்டம் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. சிறு வியாபாரிகள் பலன் பெரும் பொருட்டு அரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம். அரசாங்கம் சில கோடிகளையும் அதற்காக ஒதுக்கியது. ஆனாலும் அந்தப் பணம் ஏதோ ஓரிரு சிறு வியாபாரிகளைத் தவிர வேறு யாருக்குத்தான் அந்தப் பணம் போய் சேர்ந்தது என்று இது நாள் வரை யாருக்கும் தெரியவில்லை! இதில் பெரிய வியாபாரிகள் தான் பயனடைவதாக ஒரு பேச்சும் உண்டு!

வியாபாரம் செய்ய நிதி  ஒதுக்கீடுகளில் எந்தப் பஞ்சமுமில்லை! அரசாங்கம் அதனைச் செய்கிறது. ஆனால் சிறு வியாபாரிகள் ஆயிரம் பேருக்குச் சேர வேண்டிய நிதி ஒதுக்கீடு - அத்தனை பணமும்  ஒரு பெரிய பணக்காரர்க்குப் போய்ச் சேர்ந்தால் - அதனால் சிறு வியாபாரிகளுக்கு என்ன பயன்? அப்படி பஞ்சப்பாட்டுப் பாடுகிற பெரிய வியாபாரி கூட இருக்கிறாரா? தெரியவில்லை! ஆனால் ஒதிக்கீடுகளில் எந்தப் பஞ்சமும் இல்லை! சரியாகப் பஞ்சமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது!

ஆனால் எல்லாவற்றையும் விட அரவமே இல்லாமல்  ஒரு பஞ்சமா பாதகம் ஒன்று அரங்கேறியிருக்கிறது! அதையும் தெரிந்து கொள்ளுங்கள்!

மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பற்றி  செம்பருத்தி இணைய இதழில்  படிக்க நேர்ந்தது!

பிரதமர் நஜீப், 2010-ம்ஆண்டில் இந்தப் பள்ளியின் கட்டுமானப்பணிக்காக ஒரு மில்லியன் ரிங்கிட் கொடுப்பதாக அறிவித்தார்!. அவரைத் தொடர்ந்து முன்னாள் கல்வி அமைச்சர் முகமது யாசின் 2012-ம் ஆண்டில் இந்தப் பள்ளிக்கு இரண்டரை மில்லியன் கொடுப்பதாக அறிவித்தார்!அதே ஆண்டில் முன்னாள் ம.இ.கா. தலைவர், ஜி.பழனிவேலு அவரின் பங்காக இரண்டு மில்லியன் தருவாதாக வாக்குக் கொடுத்தார்!

ஆகக் கடைசியாக, அரசாங்கத்தின் மூலம், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் வழி, மேற்குறிப்பிட்ட மீஞாக்/செரண்டா தமிழ்ப்பள்ளிக்கு வெள்ளி20,00,000.00 (வெள்ளி இருபது இலட்சம்) நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது!

வாக்களிக்கப்பட்டதோ வெள்ளி 55,00,000.00. (ஐம்பது இலட்சம்).  கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதோ வெள்ளி 20,00,000.00 (இருபது இலட்சத்தில்).

சரி, ஏதோ 20,00,000 வெள்ளியாவது பள்ளிக்கூடம் கட்ட கொடுத்தார்களே, நிர்மாணித்தார்களே  என்று பெருந்தன்மையோடு நாமும்  ஏற்றுக்கொண்டோம்! ஆனால் பள்ளிக்கூடம் எங்கே என்பது தான் யாருக்கும் தெரியவில்லை! அடிக்கல் நாட்டிய இடத்தில் ஏதோ ஒரு சில சிமிண்ட் தூண்களைத் தவிர வேறு ஒன்றையும் காணவில்லை!

இல்லாதப் பள்ளிக்கூடத்திற்கு இருபது இலட்சம் செலவா? ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கிணற்றைக் காணோம் என்று காவல்துறைக்குப் புகார் செய்வார்! இப்போது நமது நிலையும் அப்படித்தான்! இருபது இலட்சம் செலவில் கட்டப்பட்ட தமிழ்பள்ளியைக் காணோம் என்று புகார் செய்யலாம் தான்! ஆனால் காவல்துறை இந்தப் புகாரையெல்லாம் கண்டு கொள்ளாது! காரணம் இது அரசியல்! இதையெல்லாம் தெரிந்தவர்கள் அரசியல்வாதிகள் மட்டும் தான்! அது சரி! நல்ல அரசியல்வாதிகளை எங்கே போய் நாம் தேடுவது?

ஆனாலும்  எங்கள் நாட்டில் எதற்கும் பஞ்சமே இல்லை!






No comments:

Post a Comment