Friday 26 January 2018

சீனப் பள்ளிகள் கூடுதலாக 34..!


சீனப் பள்ளிகள் நாடு முழுவதிலும்  கூடுதலாக 34 தேவைப் படுவதாக சீனப் பள்ளிகளின் அறவாரியம் டொங் ஜோங் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நம்மிடையே கோரிக்கை விடுக்க தமிழ் அறவாரியம் ஒன்று இருந்தது. ஆனால் அது கழுத்து நெறிக்கப்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. 

இப்போது நமக்குக் கூடுதலான பள்ளிகள் என்பதை விட இருப்பதைக் காப்பாற்ற வேண்டும் என்னும் போராட்டமே பெரிதாக இருக்கிறது!  சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது. பிரச்சனை பெற்றோர்களிடம் அல்ல.

நமது பள்ளிக்கூட பிரச்சனைகள் அனைத்துக்கும் காரணம் ம.இ.கா.வும் கல்வி அமைச்சும் தான்!  தொடர்ந்தாற் போல பல பிரச்சனைகளைக் கல்வி அமைச்சு ஏற்படுத்திற் கொண்டே இருக்கிறது. அதனை ம.இ.கா. வால் எதிர் கொள்ள முடியாமல். தட்டிக் கேட்க திராணியில்லாமல் கல்வி அமைச்சு எதனைச் சொன்னாலும் "ஆமாஞ்சாமி" போடுகின்ற நிலையில் தான் ம.இ.கா. இருக்கிறது!

ம.இ.கா.வில் உள்ளவர்கள் படித்தவர்கள், தானே? அப்புறம் ஏன் கல்வி அமைச்சு கொடுக்கும் தொல்லைகளைத் தட்டிக் கேட்க முடிவதில்லை?  படித்தவர்கள் என்பதால் தான் தட்டிக் கேட்க முடியவில்லை! படித்தவனுக்குத் தான் பட்டம் வேண்டும், பதவி வேண்டும், தூதரகப் பதவி வேண்டும் அதுவும் இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒர் அமைச்சருக்கு உதவியாளனாக இருக்க வேண்டும். இப்படித் தான், தான் தனது குடும்பம் என்று அவன் மற்றவரை அண்டிப் பிழைக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறான்!  தொண்டு செய்ய வந்தவன் கடைசியில் தொண்டை கிழிய தின்று விட்டு மாண்டு போகிறான்! எதற்கு வந்தானோ அவை நிறைவேறவில்லை!

பெற்றோர்கள் அரசியல்வாதிகளால் பாதிக்கப் படுகின்றனர். அரசியல்வாதிகள் செய்கின்ற தில்லுமுல்லுகளால் பள்ளிக் கூடங்கள் பாதிக்கப்படுகின்றன.  மற்ற மொழிப் பள்ளிகளை விட தமிழ்ப்பள்ளிகளில் தான் கல்வி அமைச்சுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கின்றன. தலைமை ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டங்கள் என தொடர்ந்து ஏதோ ஒரு பிரச்சனையில் தமிழ்ப்பள்ளிகள் தள்ளப்படுகின்றன.  படிக்கத்தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆர்ப்பாட்டம் செய்யவா அனுப்புகிறோம்? ஆனால் அது தான் நடந்து கொண்டிருக்கிறது! அதனாலேயே பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்க்க விரும்புகின்றனர். குற்றம் நம் பெற்றோர்கள் மீது அல்ல!

சீனப் பள்ளிகள் இன்னும் அதிகம் தேவை என்பதை அறிய நமக்கும் மகிழ்ச்சியே. இப்போது சீனப்பள்ளிகளில் மலாய், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்  கொண்டே போகிறது. சீனப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் நல்ல சிறப்பான கல்வியைப் பெறுகிறார்கள். கட்டொழுங்கு சீனப் பள்ளிகளில் இருக்கிறது.  

டொங் ஜோங் அறவாரியம் வெற்றி பெற வாழ்த்துவோம்!

1 comment: