Sunday 4 July 2021

நடவடிக்கைகள் தேவை!

 மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தான் நாடு இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

கடந்த ஆறு மாதங்களில் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று தற்கொலைகள் நாட்டில் நடந்தேறியிருக்கின்றன! கேட்பதற்கே மனம் வேதனைப்படுகிறது.

அது மட்டுமா?  ஒரு பெண் தனது மாமாவினால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.  ஒருவர் தனக்குத் தூக்கம்  வரவில்லையென்று  தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்  கொண்டிருக்கிறார்.

ஏதோ நமக்குக் கிடைத்த ஓரிரு செய்திகள் இவை, நமக்குக் கிடைக்காத செய்திகள் பல இருக்கலாம். நாம் அறியாத செய்திகள் இன்னும் பல இருக்கலாம்.

சாப்பாட்டுக்குச் சிரமப்படும் மக்கள் தங்களது வீடுகளுக்கு முன் வெள்ளைக்  கொடியை ஏற்றி வையுங்கள், உதவுகிறோம் என்று  அறிவித்த ஒருசில அமைப்பினரின் உதவியால்   பலர் பயன் அடைகின்றனர்.   

இன்று பல உணவகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இலவச உணவுகளை வழங்குகின்றன. எனக்குத் தெரிந்த ஓர் உணவகம் மாலை ஆறிலிருந்து ஏழுக்குள் நூறு உணவு பொட்டலங்களை மக்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.   தனிப்பட்ட  மனிதர்களும் பல வழிகளில் பலருக்கு உதவியாக இருக்கின்றனர்.

இப்படிப்  பலர் பல வகைகளில் மக்களின் பசியைப் போக்க உதவுகின்றனர். அவர்களுக்குத் தலை வணங்குகிறோம்.

அரசாங்கம் பண உதவி செய்வதாகவும் கூறுகின்றனர். நல்லது. ஆனால் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அது கிடைக்காது என்பது வருத்தத்திற்குரியதே!

இந்த நேரத்தில் பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். இது இறைவனின் சோதனை. இதனை சமாளிக்க இஸ்லாமிய அரசாங்கத்தால் மட்டுமே முடியும் என்பதாகக் கூறியிருக்கிறார். நமது நாட்டைப் பொறுத்தவரை இது எல்லாக் காலங்களிலும் இஸ்லாமிய நாடு தான்.  ஆனாலும் இந்த அரசாங்கத்தால் இந்தத் தொற்றை சமாளிக்க முடியாமல் திணறுகிறது என்பது தான் உண்மை!

நமது அரசியல்வாதிகள் ஆன்மீகம் பேசுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். சரியான நடவடிக்கை இல்லை என்பது தான் நமது குற்றச்சாட்டு.

நல்லது நடக்கும் என எதிர்ப்பார்ப்போம்!                                                   

No comments:

Post a Comment