Thursday 15 July 2021

என்ன மந்திரமோ, மாயமோ தெரியவில்லை!

 கோவிட்-19 நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவது பற்றி எண்ணும் போது "இது எப்படி சாத்தியம்?" என்று தான் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது!  

கோவிட்-19 கூடுவதற்கும் நாடாளுமன்றம் கூடுவதற்கும் என்ன தொடர்பு என்பது பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்ய வேண்டி உள்ளது! அது என்ன? நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று சொன்னாலே கோவிட்-19 வும் கூடி விடுகிறது! ஏதோ கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கிறதோ?

இந்த மாதம் நாடாளுமன்றம் கூடும் என்கிற அறிவிப்பு வந்ததுமே கோவிட்-19-ம்  கூடிவிட்டது! முற்றுப்புள்ளி இல்லை தொடர்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!

இன்றைய நிலையில், கடந்து 24 மணி நேரத்தில், 13,215 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எப்படிப் பார்த்தாலும் நாடாளுமன்றம் கூடுகின்ற நேரத்தில் அது 20,000 பேராக மாறி விடும்  என்று தான் தோன்றுகிறது!

அப்படிப் பார்த்தால்  இந்த முறையும் நாடாளுமன்றம் கூடுவது சாத்தியமில்லை என்று தான் ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளது!

நாடாளுமன்றம் பற்றி பேசாவிட்டாலே கோவிட்-19 கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

ஆனால் இன்றைய நிலையில் மலேசியர்கள் "கட்டுப்பாட்டில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஆகப்போவது ஒன்றுமில்லை!" என்கிற விரக்தியில் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்! காரணம் அந்த அளவுக்கு நம்பிக்கையில்லாத் தன்மை மக்களிடையே ஏற்பட்டுவிட்டது!

வேலையில்லாததினால் மக்களிடம் கையில் காசில்லாமல் மக்கள் தினம் தினம் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். எப்படி வாழப் போகிறோம், எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று ஒன்றும் புரியாமலே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்படியே எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் வங்கிகள் என்ன வெடிகுண்டுகள்  வைத்திருக்கிறார்களோ என்பது பின்னரே தெரியவரும்! அவர்கள் செய்யும் விஷமத்தனங்களை எதிர்க்க அரசாங்கத்திற்கே துப்பில்லை  அப்படி இருக்க பலவீனப்பட்டுப் போயிருக்கும் மனிதனால் என்ன செய்ய முடியும்?

இப்படி ஒரு நிலையை இந்த உலகம் எக்காலத்திலும் எதிர்நோக்கியதில்லை. இதுவே முதல் தடவை. வருங்காலங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் வரலாம். இது ஒரு படிப்பினையாக அமைந்துவிட்டது.

இது போன்ற காலத்தில், நாம் என்ன கற்றுக் கொண்டோம்? பணம் என்பது எப்போது கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். பணம் இருந்தால் தான் நெருக்கடி காலத்தில் நம்முடைய பிரச்சனைகளை நாமே தீர்க்க முடியும் என்பது தான் பாடம்.

சரி இப்போது நாடாளுமன்றம் கூடுமா அல்லது கொவிட்-19 கூடுமா என்று கேட்டால் தொற்று நோய் கூடுவதற்குத்தான் வாய்ப்புக்கள் அதிகம்!

No comments:

Post a Comment