Saturday 24 July 2021

இதற்குத் தண்டனை உண்டா?

 கிறிஸ்துவம் பற்றி பேசும்போது மகாத்மா காந்தி சொன்னதாக ஒரு தகவல் உண்டு. "கிறிஸ்துவம் நல்ல சமயம் தான் ஆனால் கிறிஸ்துவர்கள் அப்படியல்ல!"  என்று அவர் சொன்னதாகச் சொல்லுவார்கள்.

உண்மை தான். எல்லா சமயங்களும், எந்த ஒரு சமயமும்,  தவறான சமயம் என்பதாக ஒன்றுமில்லை. எல்லாமே அன்பைப்  போதிக்கின்றன. சமாதானத்தைப் போதிக்கின்றன.

ஆனால் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் சமயம் சொல்லுகின்ற எதையுமே பின்பற்றுவதில்லை! அதைத்தான் எல்லாக் காலக் கட்டங்களிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

சமயம் சொல்லுகின்ற எதையுமே பின்பற்றாமல் அதற்காக சண்டை போடத் தயாராக இருக்கிறோம்! அன்பு வேண்டாம்! சமாதானம் வேண்டாம்! ஆனால் சண்டை போடத்  தயார்! அதிகாரத்தை மீறத்  தயார்! சட்டத்தை உடைக்கத் தயார்!

எதன் பெயரால்? எல்லாமே மதத்தின் பெயரால்! 

மதத்தின் பெயரால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யத் தயாராக இல்லை. ஏழைக்கு உதவத் தயாராக இல்லை. பள்ளிகளைக் கட்டி கல்வியைக் கொடுக்கத் தயாராக இல்லை. சொந்தப் பணத்தில் எந்த ஓர் உதவியையும் செய்யத் தயாராக இல்லை.

ஆனால் மதத்தின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கத் தயார். ஏமாற்றத் தயார். எல்லா மாபாதகங்களையும் செய்யத் தயார்.

இன்னொரு பக்கம் இப்படி எல்லாத் தீயச் செயல்களையும் கடவுள் அனுமதிக்கிறார் என்று பேசவும் தயார்!  ஆமாம், அவர் அனுமதிக்கிறார்! கடவுள் அவருடைய பக்தன் ஏழையாக இருப்பதை விரும்புவதில்லை. அதனால் கொள்ளையடிப்பதை அவர் எதிர்க்கவில்லை. எல்லாப் பக்தர்களும் அதைத் தான் செய்கிறார்கள்! தவறு என்றால் அவர்கள் செய்யமாட்டார்கள்!

கொள்ளையடிப்பது யார் வீட்டுப் பணம்? நாங்கள் ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கவில்லையே! எங்களுடைய வரிப்பணம் தானே! கொள்ளை என்று ஏன் சொல்கிறீர்கள். அது எங்கள் உரிமைப் பணம்! கொள்ளையல்ல! அப்படியே நாங்கள் கொள்ளையடித்தாலும், இறைவனே! நாங்கள் என்றாவது உம்மை மறந்திருக்கிறோமா? அப்படியே நாங்கள் அதிகாரத்தை எதிர்த்தாலும்  உமக்காகத்தானே செய்கிறோம்! உமது புகழ் மங்கி விடக்கூடாது என்று தானே செய்கிறோம்!

இப்படித்தான் மேலே அதிகாரத்தில்  உள்ளவன் நினைக்கிறான்! சட்டத்தை மீறுபவன் நினைக்கிறான்!

இவர்களுக்கெல்லாம் தண்டனை உண்டா? கடவுள் கொடுக்கமாட்டர்! அவர் நல்லவர்! ஆனால் நீதிமன்றம் கொடுக்கும்!

No comments:

Post a Comment