Monday 5 July 2021

அரசாங்கத்திற்கும் நல்ல மனசு தேவை!

 கோவிட்-19 இன்று நமது நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது என்று நமக்குத் தெரியும். நமது நாடு மட்டும் அல்ல உலகில் பல நாடுகள் அந்தத் தொற்றை எதிர்த்துப்  போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் ஒரு வித்தியாசம். நமது நாடு தொற்றை எதிர்த்துப் போராடவில்லை.  ஆட்சி செய்கின்றவர்கள் பதவி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!

பதவி போராட்டம் நடக்கும் வரை கோவிட்-19 பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை! ஒரு வகையில் கோவிட்-19 இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே அவர்களது இலட்சியமாக இருக்க வேண்டும்!

ஏனெனில் ஊரடங்கு போட்டுவிட்டு அதனை மீறுபவர்கள் அதிகாரிகள், அமைச்சர்களாகவே இருக்கின்றனர்!  மீறியதற்காக அவர்கள் தண்டத்தைக்  கட்ட தயாராகவே இருக்கின்றனர்! அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல! அப்படியென்றால்  அவர்களது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே புரிந்து கொண்டால் சரி!

கோவிட்-19 முதல் அலை வந்த போது அப்போது அது ஒரு பெரிய பிரச்சனையாக நமக்குத் தோன்றவில்லை.  அப்போதும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானர்கள் என்பது உண்மை தான்.  ஆனாலும் அதற்கான முடிவும் சீக்கிரம் வந்துவிட்டது என்பதால் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் இப்போதைய நிலைமையோ முற்றிலும் வேறாகி விட்டது. தொடர்ச்சியான ஊரடங்கு என்பது எதிர்பாராத ஒன்று. வேலை இல்லை. கையில் பணம் இல்லை. சாப்பாட்டுக்கும் வழியில்லை.

எப்படியோ மக்களுக்குப் பல வழிகளில் உதவிகள் வருகின்றன. எல்லாக் காலங்களிலும் பசி என்பது கொடூரமானது. அதனை இப்போது, இந்த கோவிட்-19 காலக்கட்டத்தில் உணர்கிறோம். நமது கவலையெல்லாம் குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் என்ன பாடுபடும் என்பது தான்.

கிடைக்கின்ற உதவிகள் அனைத்தும் மனிதாபிமான உதவிகள். பலர் பல வழிகளில் உதவுகின்றனர்.  உதவிகள் மனிதர்களுக்கு மட்டும்  அல்ல. எல்லா உயிர்களுக்கும் தான். கொடுப்பவர்கள் நாய், பூனைகளுக்கும் கொடுக்கத்தான் செய்கின்றனர்.

இவ்வளவு கிடைத்தும் ஒரே ஒரு பெரிய குறை. அரசாங்கம் செயலற்றுக் கிடக்கின்றதே என்கிற குறை தான். உண்மையில் இப்போது கிடைக்கின்ற உதவிகள் அனைத்தும் அரசாங்கத்தின் மூலம் வர வேண்டும். அரசாங்கம் இது ஏதோ மக்களுடைய கடமை என்பதாக நினைப்பதாகத் தோன்றுகிறது.

அரசாங்கம் தனது கடமையைச் செய்யவில்லை. நாட்டில் உள்ள மக்களுக்கு வர வேண்டிய அனைத்து உதவிகளும் அரசாங்கம் மூலம் தான் வர வேண்டும். உதவி செய்ய முடியவில்லை என்றாலும் சவடால்தனங்களுக்கு  எந்தக் குறைச்சலும் இல்லை.

இப்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு  சராசரியாக எண்பது பேர் தொற்றினால் மரணம் அடைகின்றனர். இது ஒன்றும்  சிறிய  எண்ணிக்கை  அல்ல. அதே போல  தற்கொலைகளும்  நாள் ஒன்றுக்கு மூன்று என்பதாகச் சொல்லப்படுகின்றது.

இப்போது புதிது புதிதாக கோவிட்-19 மாற்றம் கண்டு கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

நேற்று ஓர் அதிர்ச்சி செய்தி. நண்பர் ஒருவர் மரணமடைந்தார். வயது 52  தான் ஆகிறது. காலையில் வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, மூச்சுத்திணறல்,  உடனே மருத்துவமனை. போகும் வழியிலேயே மரணமடைந்தார். கோவிட்-19 என்பதாக மருத்துவமனை சொல்லுகிறது.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அரசாங்கம் இப்படி மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது  நாட்டுக்கு நல்லதல்ல. ஒரு பலவீனமான அரசாங்கம் எப்படி செயல்படும் என்பதைத்தான் இப்போது பார்க்கிறோம்.

நல்லதோ, கெட்டதோ அரசாங்கம் செயல்பட வேண்டும்.  நல்லது நடக்க வேண்டும்.  நல்லதே நடக்கட்டும்!

No comments:

Post a Comment