Monday 19 July 2021

முடியும் என்றால் முடியும்!

 

                                             ZOYO THOMAS LOBO - PHOTO JOURNALIST

பெரிதாக ஒன்றும் சிந்திக்க வேண்டாம். முடியும் என்றால் முடியும். அவ்வளவு தான்.

எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வாழ்க்கையில் எத்தனையோ பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் இந்த ஸொயோ. வாய்ப்புக் கிடைத்தால் அல்லது வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் எல்லாரும் சரித்திரம் படைக்கத் தயார் ஆனால் கிடைப்பதில்லையே!

அவரிடம் அப்படி என்ன விசேஷம்? முதலில் ஸொயோ ஒரு திருநங்கை. அது தான் முதல் விசேஷம்!  அதுவும் மிகவும் வறுமை வாட்டி எடுக்கும் குடும்பத்தில் பிறந்தவர். அடுத்து அவர் ஒரு புகைப்பட கலைஞர்.

ஸொயோ இந்தியா, மும்பாயைச் சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.  தனது தந்தையை இளம் வயதிலேயே இழந்துவிட்டார். தாயுடனும், சகோதரியுடனும் வாழ்ந்து வந்தார்.  தனது மகள் ஒரு திருநங்கை என்று தெரியவர அந்தக்  கவலையில் தாய்  மதுபோதைக்கு அடிமையானார். ஸொயோ பல சிறு சிறு வேலைகள் செய்து வந்தாலும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. தங்குவதற்கு ஓர் இடமில்லை.

அவர் ஒரே இடத்தில் நீண்ட நாள் 'வேலை' செய்தார் என்றால் அது ஓடும் தொடர் வண்டியில் மட்டும் தான்.  சுமார் பத்து ஆண்டுகள் அவர் தொடர் வண்டிகளில் பிச்சை எடுத்து வந்திருக்கிறார். ஆமாம் பிச்சை எடுப்பது தான் திருநங்கைகளின் பொதுவான தொழில். அவரும் அதைத்தான் செய்திருக்கிறார்.

அங்கு அவர் 'சம்பாதித்த' பணம் தான் அவருக்குப் பிற்காலத்தில் உதவியிருக்கிறது.  புகைப்படக்கலை எப்படியோ அவரை, அந்த தொடர் வண்டிகளின் பயணத்தில் போது ஈர்த்திருக்கிறது.  கேமராவின் விலையோ அவர் வாங்கும்  விலையில்  இல்லை. ஆனாலும் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை சரியான வழியில் செலவழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  பழைய கேமரா ஒன்றை சுமார் 30,000 ரூபாய்க்கு வாங்கினார். அவரே படம் பிடிக்கும் கலையைச் சொந்தமாகக்  கற்றுக் கொண்டார்.

ஆமாம் எங்கே தொழிலைத் தொடங்குவது? இருக்கவே இருக்கிறது தொடர் வண்டி. அங்குச்  சம்பாதித்த பணத்தை அங்கேயே முதலீடு செய்தார்! நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது.

தொடர்வண்டி நிலையத்திற்கு வெளியே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தை படம் எடுத்தவர் அவர் மட்டும் தான். அவர் பிடித்த படங்கள் தான் பின்னர் பத்திரிக்கைகளில் வெளியாயின. அன்று முதல் அவர் பத்திரிக்கைத் துறையில் புகைப்பட கலைஞராக மாறினார்! 

அதன்  பின்னர் அவருடைய வாழ்க்கைப் பாதை மாறிவிட்டது. புகைப்பட கலைஞர் என்பது மட்டும் அல்லாமல்  யுடியூப் தொடரில் நடித்து ஒரு நடிகையாகவும் மாறிவிட்டார்!

ஒருவர் என்ன நிலையில் இருந்தாலும் தான் அந்நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் பிறந்துவிட்டாலே அடுத்த கட்டத்துக்கான முதல்படியைக் கடந்துவிட்டார் என்பது உறுதி.

முடியும் என்றால் முடியும்! அவ்வளவு தான்! யாசகம் செய்தால் கூட வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது தான் பாடம்!

No comments:

Post a Comment