Thursday 8 July 2021

அநாகரிகம் தான்! என்ன செய்யலாம்?

 வங்கியில் கொள்ளை அடித்தால் அது கொள்ளை. அவர்கள் குற்றவாளிகள்! சட்டத்தை சந்தித்தாக வேண்டும்.

ஆனால் இந்த கொள்ளையோ அந்த வகையைச் சார்ந்தது அல்ல. இதுவோ உணவு வங்கி!  பசிக்கும் ஏழை மக்களுக்காக பசியைப்  போக்க நினைக்கும் ஒரு சிலரின் சிறிய முயற்சி.

ஆனாலும் அதிலும் அத்து மீறல். அங்கிருந்த அத்துணை பொருட்களையும்  சில நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்று விட்டனர், நான்கு பேர் சேர்ந்த ஒரு கும்பல்! காரில் வந்தார்கள்! அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்!  அவர்களைப் பார்க்கும் போது, இவர்கள் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் மூன்று பேர் சாப்பாட்டை சாப்பிடுபவர்கள் என்பது தான் அதன் சிறப்பு அம்சம்!

அவர்கள் அகோரப் பசி உடையவர்களாக இருக்க வேண்டும்!  இல்லாவிட்டால் இந்த அளவுக்கு அவர்கள் செயல்பட்டிருக்க மாட்டார்கள்! 

என்றாலும் அவர்கள் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். அவர்களைப் போலவே நாட்டில் பலர் பட்டினியோடும் பசியோடும் இருக்கின்றனர்.  அப்படியாப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம்.

அவர்களுடைய நிலை நமக்கும் புரிகிறது. அவர்களும் பலரைப் போல வேலை இல்லாமல் இருக்கலாம். பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் இருக்கலாம். வேலை இல்லை என்றால் இயல்பாகவே சாப்பிடுவதற்குப் பொருட்களை வாங்க வழியில்லை.  அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கும். அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் பசியோடு இருப்பார்கள்.

வேலை இல்லாத ஒரு குடும்பத் தலைவனுக்கு உள்ள அனைத்துப் பிரச்சனைகளும் அவர்களுக்கும் உண்டு. இப்போது, இன்றைய நிலையில், அவர்கள் உணவு வங்கியின் மேல் கை வைத்திருக்கிறார்கள்.  இது ஆரம்பம். 

அரசாங்கம் வேலை இல்லாதோரின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு போனால் இது எப்படிப்பட்ட  ஒரு நிலையை நாட்டில் உருவாக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் அரசாங்கம் இப்போதே, நாளை அல்ல நாளை மறுநாள் அல்ல,  துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

கோவிட்-19 குறைவதற்கான அல்லது ஒழிப்பதற்கான வழிவகைகளைக் காண வேண்டும். தடுப்பூசி ஒன்றே வழி என்றால் அதனை துரிதப்படுத்த வேண்டும். இனி பொறுத்துப் பயன் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதால்  அதனைச் சோதித்துப் பார்க்கின்ற வேலையில் அரசாங்கம் இறங்கி விடக் கூடாது.

மக்கள் பொறுமையோடு இருக்கிறார்கள். அதுவே மலேசியர்களின் பண்பு. அதனை அரசாங்கம் சீண்டி பார்க்கின்ற  வேலை வேண்டாம். வன்முறை என்பது நமது கலாச்சாரம் அல்ல.  நாம் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள்.

ஆனால் மக்களைப் பட்டினி போடுவது எங்கே கொண்டு செல்லும் என்பதை மற்ற நாடுகளிலிருந்து அரசாங்கம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாக் காலங்களிலும் மக்கள் பொறுமை காத்திருக்கிறார்கள். மக்களுக்குச் சம்பாதிக்கும் வழிகள் இருந்தால் அவர்கள் தொடர்ந்து பொறுமையோடு தான் இருப்பார்கள். சம்பாதிக்கும் வழிகளை அடைத்தால் அவர்களும் தடம் மாற வேண்டிய சூழல் ஏற்படும்.

மேலே சொல்லப்பட்ட அந்த சம்பவம் கேலிக்குறியதாக இருக்கலாம். ஆனால் அது அபாயச் சங்கை ஊதுகிறது என்பது கேலிக்குறியது அல்ல!

No comments:

Post a Comment