Tuesday 27 July 2021

உதவி செய்வதிலும் அயோக்கியத்தனமா?

 இந்த கோவிட்-19 காலக் கட்டத்தில் மக்கள் பலவாறான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அதனால் தான் ஏதோ ஒரு சிலர் தங்களால் இயன்றதை சிறிய அளவிலோ  பெரிய அளவிலோ  உதவி செய்து வருகின்றனர். அவர்களுடைய விசாலமான - பெருந்தன்மையான மனதிற்கு மனதார பாராட்டுகிறோம்.

ஆனால் உதவி செய்வதிலும் "இவர்களுக்குத்தான் இந்த உதவி! இந்த இனத்திற்கு மட்டும் தான் இந்த உதவி! இந்த இனத்தினர் எந்தப் பொருளையும் தொட வேண்டாம்!" என்று எழுதிப் போட்டு உதவியிலும் அவர்களின் அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறார்களே இதைப் படிக்கும் போது நமக்கே வியப்பாய் இருக்கிறது.

இன்றைய நிலையில் பலர் - இந்த இனத்தவர் தான் - என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் கஷ்டத்தில் உள்ளனர். சீனர்கள் பணக்காரர்கள் என்று சொன்னாலும் அவர்களிலும் பலர் சிரமத்தில் உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதேபோல மலாய்க்காரர்கள் அனைவருமே அரசாங்க ஊழியர்கள் அல்ல. அதனால் அவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு. இதில் இந்தியர்களின் நிலை இன்னும் கொஞ்சம் மோசமான சூழ்நிலை என்பது தெரிந்ததே.

இந்த நேரத்தில் உதவி செய்ய நினைப்பவர்கள்  நிபந்தனைகளை விதிப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று. ஒரு சிலருக்கு வித்தியாசமான மனோபாவம் உண்டு.  தாங்கள் சார்ந்த மதத்தினருக்கு உதவி போய் சேர்ந்தால் மட்டுமே தங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் உண்டு.

இப்படி பேசுவது முட்டாள் தனம் என்று தெரிந்தாலும் அவர்களுடைய நம்பிக்கையை நாம் ஏன் சிதைக்க வேண்டும்? ஆனால் அவர்கள் ஒன்று செய்யலாம். அவர்களுடைய வழிப்பாட்டுத்தலங்களில் அவர்கள் உதவிகளைச் செய்தால் அங்கு மாற்று மதத்தினர் யாரும் போக மாட்டார்கள். இது ஒரு வழி அவ்வளவு தான்.

இது போன்ற நபர்களை ஜோகூர் சுல்தான் வனமையாகக் கண்டித்திருக்கிறார். உதவிகள் இனப்பாகுபாடு இன்றி எல்லா இனத்தவருக்கும் போய்ச் சேர வேண்டுமே தவிர அங்கு எந்த பாகுபாட்டையும் காட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அதுவும்  ஒரு மளிகைக்கடையில் இது போன்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு மளிகைக்கடை என்றால் வாடிக்கையாளர்களில் எல்லா இனத்தவர்களும்  உண்டு. ஒரு குறிப்பிட்ட இனத்தவர் வேண்டாம் என்று அவர்களால் ஒதுக்கிவிட முடியுமா?

இப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்தவர் ஒரு மளிகைக்கடைக்காரர். எந்த இனத்தவர் என்று தெரியவில்லை. இந்த குறிப்பிட்ட இனத்தவர்கள் வேண்டாம் என்று சொல்லப்பட்டவர்கள் யார்?இந்தியர்கள்!

மிகவும் இக்கட்டான காலக் கட்டத்தில் இந்தியர்களுக்கு உணவு பொருட்கள் கூட கொடுக்கக் கூடாது  என்று மற்ற இனத்தவர்கள் நினைக்கும் அளவுக்கு நமது தரம் உயர்ந்திருக்கிறதா? 

எது எப்படியிருப்பனும் நாம் அவர்களைப் போல இல்லாது அனைவருக்கும் நல்லதே செய்வோம்! அவர்கள்  ஏழையோ இல்லையோ அதுவே நமது தாரக மந்திரமாக இருக்கட்டும்! 

No comments:

Post a Comment