Tuesday 20 July 2021

தடுப்பூசியா? கடுப்பூசியா?

 கோவிட்-19 - க்கான ஊசி போடும் வரை மக்களை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். போட்டப் பிறகோ ஃபசர் ஊசியா அல்லது  சினொவாக் ஊசியா என்று கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள்!

ஏதோ ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஊசிகளுக்கு ஏற்பாடு செய்தது அரசாங்கம். பொது மக்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை. ஊசி போட்ட பிறகு இப்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது! எது சரியான ஊசி என்று இப்போது பேசிக் கொண்டிருப்பதில் யாருக்கு என்ன பயன்?

ஃபைசர் உசத்தியா சினோவாக் உசத்தியா என்று விவாதத்தை இப்போது நடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. அரசாங்கம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

கிளந்தான் மாநிலம் சினோவாக் ஊசியை இனி பயன்படுத்தப் போவதில்லை என்கிற ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. வருகிற செய்திகள் அனைத்தும்  சினோவாக் மருந்துக்கு எதிராகவே வருகின்றன.

 எந்த ஒரு தடுப்பு மருந்துக்கும் எதிராக கருத்து சொல்லுகின்ற அளவுக்கு நமக்கு அந்தத் துறையைப் பற்றி போதுமான அறிவு இல்லை. ஆனால் அந்த மருந்துகளைப் பற்றிய செய்திகளைப் படித்து தெரிந்து கொள்ளுகிற அறிவு இருக்கிறது. ஆனாலும் அந்த செய்திகளிலும் அது சரியா தவறா என்று பிரித்துப் பார்க்கின்ற அறிவு இல்லை.

அதனால் எல்லாரையும் போல நமக்கும் தடுமாற்றங்கள் ஏற்படுவது என்பது இயற்கையே. எந்த ஊசி போட வேண்டும் என்பது நம் கையில் இல்லை.  அதை அரசாங்கம் தேர்ந்தெடுக்கிறது. ஒருவருக்கு ஃபசர் ஊசி என்றால் இன்னொருவருக்கு சினோவாக் - இப்படி ஊசி போடும் வரை நமக்கு என்ன ஊசி போடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. தெரிந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.

அரசாங்கத்திற்கே எது சரி, எது தவறு என்று இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும் மக்களைக் குழப்ப வேண்டாம் என்பது தான் நமது வேண்டுகோள்.

சினோவாக் தடுப்பூசி தரமற்றது என்று யாரும் சொல்லவில்லை.  அதன் தடுப்பாற்றல் ஃபசரை விட குறைவு என்று தான் சொல்லப்படுகிறது. இதனையும் சரிசெய்து விடலாம் என்கிறார் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம். மூன்றாவது ஊசியைப் போட்டு விட்டால்  எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் அவர். அதன் ஆற்றல் ஃபைசர் ஊசிக்கு சமமாகி விடும். அது சரி என்றால் பிரச்சனை ஒன்றுமில்லை. விஞ்ஞான உலகம் அதனை ஏற்றுக் கொள்கிறது என்பது தான் பொருள்.

மக்களைக் குழப்புவதை விட சினோவாக் ஊசி போட்டு முடித்தவர்களுக்கு இன்னொரு ஊசி போடப்படும் என்றால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். அதுவரை இந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இத்தனையும் சொல்லிவிட்ட பிறகு இதனையும் சொல்லி விடுகிறேன். இப்போதைக்கு, சினோவாக் ஊசி போட்டவர்களுக்கு, ஒரு பாதுகாப்பு உண்டு  என்பதைத் தெரிந்து கொண்டால் போதும். பயப்பட ஒன்றுமில்லை.

கடுப்பானாலும் ஏதோ ஒர் ஊசியைப் போட்டுத்தான் ஆக வேண்டும்! அது எந்த ஊசியாய் இருந்தால் என்ன!

No comments:

Post a Comment