Saturday 17 July 2021

நம்பிக்கைத் தீர்மானம்!

 முன்னதாகவே மணியோசை வந்துவிட்டது!

வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் முகைதீன் யாசினுக்கு  எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாது என்பதாக அறிவிப்பு வெளியாகிவிட்டது!

பிரதமருக்கு வயிற்றைக் கலக்குகிற  ஒரே பிரச்சனை என்றால் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தான்! மருத்துவமனைக்குப் போகிற அளவுக்கு வயிற்றை கலக்குமா என்றால் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லுவதற்கு இல்லை! அன்றைய நிலையை இன்றே கணிக்க முடியாது! காரணம் இது அரசியல்!

ஒரு விஷயம் என் வயிற்றைக் கலக்குகிறது! அம்னோ கட்சியினர் ஏன் இப்படி நாடகம் ஆடி மக்களின் வெறுப்புக்கு ஆளாகின்றனர் என்பது தான் புரியவில்லை.

தொடர்ந்தாற் போல பிரதமர் முகைதீனின் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பவர்கள் என்றால் அது அம்னோ கட்சியினர் தான். அது நாடகம் என்பது நமக்குப் புரிகிறது. ஒவ்வொரு நாளும் இவர்கள் வாயில் வருவதெல்லாம் "ஆதரவை விலக்கிக் கொள்வோம்! விலக்கிக் கொள்வோம்! விலகுவோம்!" இப்படித்தான் இருக்கிறதே தவிர பிரதமருக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுப்பதில்லை.

இதன் பின்னணியில் என்னவோ நடக்குது என்பது நமக்குத் தெரியும். ஆனால் நன்றாகவே நடிக்கிறார்கள் என்பதும் நமக்குப் புரிகிறது.

இந்த பயமுறுத்தல் நாடகம் தேவையற்றது.   பிரதமர் முகைதீன் யாசினை இந்த அளவுக்கு நெருக்கடி கொடுப்பதும் தேவை இல்லாதது.

அவருடைய பிரச்சனையே அம்னோவால் உருவாக்கப்படுகிறது.  நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்கிற ஒரு பிரச்சனை இல்லையென்றால் காரியங்கள் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். அரசியல் தெரியாதவர் அல்ல அவர். நாட்டை வழி நடத்த முடியாதவர் அல்ல. அவர் அரசியல் வாழ்க்கை என்பது மிக நீண்ட ஆண்டுகள் கொண்டவை.  அவருடைய ஒரே பிரச்சனை அவருக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பலம் இல்லாமை தான். அதனால் குரல் கொடுப்பவர்களுக்கெல்லாம் இவரும் ஒத்துப் போகிறார்! ஆட்சி எந்நேரத்திலும் கவிழுமோ என்கிற பயத்தோடேயே அவர் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்.

இப்போது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரமுடியாது என்பதால் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என நாம் நம்பினாலும் கோவிட்-19 போகிற வேகத்தைப் பார்க்கும் போது கடைசி நிமிடத்தில் ஏதேனும் மாற்றம் வருமா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானமா? நம்பிக்கைத் தீர்மானமா? பார்ப்போம்!

No comments:

Post a Comment