Saturday 10 July 2021

இரக்கமற்ற அரக்கர்கள்!

 மனிதர்களை விட விலங்குகள் எத்தனையோ மடங்கு உயர்வானவை, போற்றத்தக்கவை!

அதுவும் நாய்கள் என்றால் அன்பைத் தவிர வேறொன்றும் அறியாதவை. அந்த அன்பைக் காட்டும் அந்த  நாய்களிடம்  மனிதன் எப்படி நடந்து கொள்கிறான்?

நகராண்மைக் கழகங்களில் பணிபுவர்களுக்கு ஏனோ மனிதாபிமானமே இருப்பதில்லை.  தெரு நாய்கள் தான் என்றாலும் அவைகளைப் பிடிப்பதற்கோ,  கொல்லுவதற்கோ  வேறு பல வழிமுறைகள் இருக்கின்றன. நாய்கள் மட்டும் அல்ல, பூனை, குரங்கு போன்ற எந்த  விலங்காக  இருந்தாலும் அவைகளும் ஓர் உயிர் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

ஒரு காலக் கட்டத்தில் நான் தோட்டப்புறத்தில்   வேலை செய்யும் போது  அப்போதும் சுற்றித்திரியும் இந்த நாய்களை அடித்துக் கொல்லுவதில்லை. சுட்டுத் தள்ளுவார்கள்.  புதைத்து விட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவு தான். அப்படி செய்யும் போது ஒரு சில நிமிடங்களில் பிரச்சனை முடிந்தது. அவர்களும் அரசாங்க ஊழியர்கள் தான்.

இவர்கள் நாய்களைப் பிடிக்கத்தான் வருகிறார்கள்.  ஆனால் இவர்களுக்கும் நாய்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதவர்கள். தெரு நாய்கள்,  வீட்டில் வளர்க்கும் நாய்கள்  போன்ற எந்த ஒரு வித்தியாசமும் தெரியாதவர்கள்! நாய்களைப் பார்த்திருப்பார்களே தவிர அவைகளோடு பழகாதவர்கள்.  நாய்களைப் பற்றியான எந்த ஒரு புரிதலும் இல்லாதவர்கள். அவர்களைப் போய் நாய் பிடிக்கிற வேலையைச் செய்யச் சொன்னால் என்ன ஆகுமோ அது தான் ஆகியிருக்கிறது சமீபத்திய நிகழ்வு!

அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது தான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி! நாய்களைக் கொடூரமாக  கொன்றிருக்கிறார்கள்.  அது அவர்களுக்கு எந்த வித மன பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை! அப்படி ஒரு சூழலில் அவர்கள் வளரவில்லை!

ஆனால் நமக்கோ அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு குற்றம் என்பது  தான் நாம் வளர்ந்த விதம்.  அந்த செய்தியைப் படிக்கும் போதே நமக்கு எங்கோ வலிக்கிறது.  மனத்தைப் பாதிக்கிறது.

இப்போது நடந்தது ஒன்றும் முதல் சம்பவம் அல்ல. ஏற்கனவே நடந்த சம்பவங்களின் நீட்சி தான். இது இனியும் தொடரும். அவர்கள் செய்வதும் நாம் நமது எதிர்ப்பைத் தெரிவிப்பதும் இப்படித்தான் அது போய்க் கொண்டிருக்கும்!

காவல்துறை ஏதோ ஒரு சட்டத்தின் கீழ் அதனை விசாரிக்கும். சொல்லுவார்கள் அதனைச் செய்வார்களா அதுவும்  தெரியாது! நகராண்மை ஊழியர்களைக் குறை சொல்லுவதில் பயனில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்கின்ற வழி சரியான வழி இல்லை என்றால் அதற்கான மாற்று வழி என்ன என்பதை அவர்களுடைய உயர் அதிகாரிகள் சொல்ல வேண்டும்.

இதுவும் இல்லை! அதுவும் இல்லை! எதுவும் இல்லை! சும்மா பேசிவிட்டுப் போக வேண்டியது தான்!

No comments:

Post a Comment