Tuesday 6 July 2021

சோர்ந்து போக வேண்டாம்!

 மிகவும் சோர்ந்து போன ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வேலை இல்லை. கையில் காசு இல்லை. சாப்பிட ஒன்றுமில்லை. வருங்காலம் என்று ஒன்று இருக்குமா, இருக்காதா என்று ஒன்றும் புரியவில்லை! நமக்கு மட்டும் தானா  இந்த நிலைமை? இல்லை! உலகமே இப்படி ஒரு நம்பிக்கை இழந்த நிலையில் தான் தள்ளாடிக் கொண்டிருக்கிறது!

நாம் மட்டும் தனி ஆளில்லை! நம்மைப் போல இன்னும் பலர் நம்மைப் போலவே தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்! 

ஆனால் இந்த நிலையிலும் ஒரு சிலரைப் பார்க்கும் போது நம்பிக்கைத் துளிர் விடுகிறது.  அவர்கள் எந்த சூழலிலும் நம்பிக்கையை இழப்பதில்லை. இது போனால் என்ன, இன்னொன்று என்று சர்வ சாதாரணமாக தங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லுகின்றனர்.

ஒரு முக்கியமான விஷயத்தை இந்தக் கோவிட்-19  காலக் கட்டத்தில் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சீனர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஒரே காரணம் தான். நாம் சொல்லுவது எல்லாம் அவர்கள் பணக்காரர்கள் என்பதால் அவர்கள் கஷ்டப்பட மாட்டார்கள் என்பது தான்.

இப்போது  பல வியாபாரங்கள் முடங்கிப் போய் கிடக்கின்றன. கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.  வியாபாரம் இல்லை அப்புறம் எப்படி அவர்கள் பணக்காரர்கள் என்கிறோம்?  அவர்களிடம் சேமிப்பு இருக்கின்றது. அதைத்தான்  இப்போது அவர்கள் பயன்படுத்துகிறார்கள். வேறு இரகசியம் ஒன்றும் இல்லை. அவர்கள் சேமிப்பு உள்ள சமுதாயம் அதை  வைத்துத் தான் அவர்களைப் பணக்காரர்கள் என்கிறோம். 

சேமிப்பு இல்லாத சமுதாயம் தான் இன்று உதவிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சேமிப்பு உள்ளவர்கள் தங்களது சேமிப்பை இந்த மிகவும் கடினமான காலக் கட்டத்தில் பயன்படுத்துகின்றனர்.

சேமிப்பதில் அக்கறை காட்டுபவர்கள் எல்லா சமுதாயத்திலும் இருக்கின்றனர். அவர்கள் யாருடைய உதவிகளையும் எதிர்பார்ப்பதில்லை. அதைத்தான் தன் கையே தனக்கு உதவி என்று நமக்குப் பரம்பரையாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதைக் கடைப்பிடிப்பவர்கள் நம்மிடையே பலர் உண்டு.

அதனால் தான் நமக்குக்  கோவிட்-19 பெரிய பாடத்தைக் கற்பித்திருக்கிறது என்று சொல்ல வருகிறேன்.  சேமிப்பு என்கிற பாடத்தை அது கற்றுக்  கொடுத்திருக்கிறது.

இப்போதும் கூட அப்படி ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இந்தக் கடினமான காலக் கட்டத்தில் நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்.  நமக்குப் பல உதவிகள் பல தரப்பினரிடமிருந்து கிடைக்கின்றன. அரசாங்கம் மானியங்கள் கொடுத்து உதவுகின்றது.  பொது மக்கள், நிறுவனங்கள் மக்களின் பசியைப் போக்க பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். 

கோவிட்-19 சீக்கிரம் நாட்டை விட்டு ஒழியும். நாமும் பழைய நிலைக்குத் திரும்புவோம்.

மனம் தளராதீர்கள்! சோர்ந்து போகாதீர்கள்! துணிந்து நில்லுங்கள்! இதுவும் கடந்து போகும்!

No comments:

Post a Comment